
நியூசிலாந்து அணித்தலைவர் பிரண்டம் மெக்கலம் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சேச்சில் தொடங்கியுள்ளது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு அணித்தலைவர் மெக்கலம், கொரி அண்டர்சன் அதிரடி காட்டினர்.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கொரி அண்டர்சன் 66 பந்தில் 8 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் என 72 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய நியூசிலாந்து அணித்தலைவர் பிரண்டம் மெக்கலம் 54 பந்துகளில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார்.
இதற்கு முன் விவியன் ரிச்சர்ட்ஸ், மிஸ்பா அல் ஹக் ஆகியோர் 56 பந்துகளில் சதம் அடித்ததே உலக சாதனையாக இருந்து வந்தது. அதை தற்போது மெக்கலம் முறியடித்து விட்டார்.
தொடர்ந்து விளாசித் தள்ளிய மெக்கலம் 79 பந்துகளில் 21 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் என 145 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மெக்கலம் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 106 ஆறு ஓட்டங்களை விளாசியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.
இதனால் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 370 ஓட்டங்கள் குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கட்டை இழந்து 57 ஓட்டங்கள் எடுத்துள்ளது.





