பெண்கள் வீட்டில் தனியாக இருக்கமுடியாத சூழலை ஹரிஸ்ணவியின் மரணம் உணர்த்தியுள்ளது : செல்வம் அடைக்கலநாதன்!!

575

Selvam Adaikalanaathan

வவுனியாவில் பாலியல் வல்லுறவின் பின்னர் கொலைசெய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, கொலைசெய்யப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்று திரும்பிய வட மாகாணசபை உறுப்பினர் இந்திரராஜா மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட குரோதம் காரணமாகவோ அல்லது தூண்டுதல் காரணமாகவோ இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும், அல்லது அரசியல் பழிவாங்கலாக இருக்கலாம் என சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் உயர் நிலை அரசியல்வாதி ஒருவர் தாக்கப்பட்ட விடயத்தில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாப்பதும் பொலிஸாரின் கடமை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

இளம்பெண்கள், பாடசாலை மாணவிகள் வீட்டில் தனியாக இருக்க முடியாத ஆபத்தான சூழல் நிலவுவதாகவும், நாடு பயங்கரமான நிலைமைக்குள் சென்றுகொண்டிருப்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.