வவுனியாவில் முதல்முறையாக பிரம்மாண்டமான முறையில் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேவரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கிவரும் அருளகம் சிறுவர் இல்லத்தினராலும் ஆலய அறங்காவலர் சபையினராலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்துமாணவிகளது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு வவுனியா நகரசபையின் புதிய கலாசார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியா மாவட்ட கலை இலக்கிய வரலாற்றில் இதுவரையில் நடைபெற்றிராத அல்லது கண்டிராத அளவுக்கு நிகழ்வு தொடங்கியது முதல் ஒன்பது மணியளவில் நிகழ்வு நிறைவு பெறும்வரை அரங்கு நிறைந்த மக்கள் கூட்டம் ஒன்று திரண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற அரங்கேற்ற நிகழ்வில் வவுனியாவின் பலபகுதிகளிலும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்ட கலை இலக்கியவாதிகள் மேதைகள் பேராசிரியர்கள் மற்றும் பலகலைகழக மற்று சிறுவர் இல்லங்களை சேர்ந்த சிறுவர் சிறுமியர் நீதிமன்ற நீதிபதிகள் சட்டத்தரணிகள் பொறியியலாளர்கள் இசை நடனத்துறைகளை சார்ந்த ஆசிரியர்கள் வர்த்தக பிரமுகர்கள் என அரசியல்வாதிகள் எனப்பல்வேறு தரப்பையும் உள்ளதாகிய மக்கள்கூட்டம் அரங்கு நிறைந்து காணப்பட்டது .
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கி வரும் அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்தவர்களும் அகிலாண்டேஸ்வரி நுண்கலை கல்லூரி மாணவிகளும் நிருத்தியநிகேதன நுண்கலை கல்லூரியின் ஸ்தாபகர் திருமதி சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் மாணவிகளுமான
செல்விகள் : சுபாயினி இராமகவுண்டர்
ரிஷிகா செல்வராசா
தனுஷா சசிகரன்
பிரியதர்சினி குணசேகரன்
தியாணுகா தியாகலிங்கம்
ஐந்து பேரது பரத நாட்டிய அரங்கேற்றம் ஒரே மேடையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி அரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி கௌரவ மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் கௌரவ விருந்தினராக வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.தி.விஸ்வரூபன் மற்றும்சிறப்பு விருந்தினர்களாக கலைஞர் வேல் ஆனந்தன்(முதுநிலை ஆடற்கலை ஆற்றுகையாளர் மற்றும் வட கிழக்கு மாகாணத்தின் ஒய்வு பெற்ற உதவிகல்வி பணிப்பாளர்)திருமதி அருட்செல்வி கிருபைராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் நடனத்துறை யாழ பல்கலைகழகம் )கலாநிதி சர்மிளா ரஞ்சித்குமார் (சிரேஷ்ட விரிவுரையாளர் நடனம் தலைவர் நடன நாடக அரங்கியற்றுறை சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைகழகம் மட்டகளப்பு )ஆகியோர் கலந்து கொண்டனர் .
மேற்படி நிகழ்வின் போது ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கையில் அமர்ந்திருந்து அனைத்து மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்வுளையும் கண்டுகளித்து இறுதியில் அனைவர் நெஞ்சையும் நெகிழ வைத்த வகையில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் உரையாற்றினார்கள்.
நீதிபதி அவர்களது உரையில் வவுனியாவில்தான் சேவையாற்றிய காலப்பகுதியில் ஏராளமான சிறுவர் சிறுமியரை இந்த அருளகத்தில் இணைத்ததாகவும் அவர்களில் சிலர் தான் இன்றைய அரங்கேற்றத்தில் பங்கு கொண்ட மாணவிகள் எனவும் இந்த அருளகத்தின் குழந்தைகளுக்கு தானே சட்ட ரீதியான தந்தை மற்றும் சட்டரீதியான பாதுகாவலன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று கோவில்நிர்வாகம் மற்றும் அறங்காவலர் சபையினரது அர்ப்பணிப்புள்ள மற்றும் சமூக பொறுப்புள்ள சேவையும் அகிலாண்டேஸ்வரியின் அருளாசியும் தொடர்ந்து இவர்களுக்கு கிடைக்கவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.
மேலும் வவுனியா நிருத்தியநிகேதன ஸ்தாபகர் சூரியாழினி வீரசிங்கத்தின் நேர்த்தியான நெறியாள்கையை பாராட்டியதோடு தமிழ்மணி அகளங்கன் அவர்களின் வழிநடத்தலையும் பாராட்டினார் .
தொடர்ந்து அரங்கேற்ற நிகழ்வுக்கு வாய்ப்பாடு வழங்கிய சிவமைந்தனையும் அவருடன் இணைந்த பக்கவாத்திய கலைஞர்களையும் பாராட்டி அவர்களுக்குரிய கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது ….
படங்கள்:கஜன்






