
தாயொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாயிடம் விஷேட விசாரணை கம்பொல, சிங்கபிட்டிய பிரதேசத்தில் தாயொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் குறித்து விஷேட விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.
குறித்த இராணுவ சிப்பாய் தற்போது பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்ககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அண்மையில் கம்பொல, சிங்கபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயொருவரை பத்து பேர் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யும் கம்பொல பொலிஸாருக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இராணுவத் தளபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இலங்கை இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.அந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பொலிஸ் விசாரணைகளுக்கு சமாந்தரமாக இராணுவ பொலிஸாரினாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இராணுவ சட்டத்தின் கீழ் விசாரணை நீதிமன்றம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைகளில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாய் குற்றவாளியாக இணங்காணப்பட்டால் இராணுவ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று இலங்கை இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.





