
கடந்த 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்த ஐந்து மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி திரு. மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் ஆற்றிய உரை ………
இன்றைய பரதநாட்டிய அரங்கேற்றத்தில் என்னைப் பிரதம விருந்தினர் என்று கூறினார். உண்மையில் நான் பிரதம விருந்தினர் இல்லை. எனது வீட்டுத் திருமணத்திற்கு நான் ஒரு தந்தையாக வந்திருக்கின்றேன். நான் வவுனியாவை நேசித்தேன் வவுனியா மண்ணை நேசித்தேன். அதற்கொரு மணம், அதற்கொரு குணம். அந்த மண்ணில் அகிலாண்டேஸ்வரி அருளகத்தில் 2002-2008 வரை நான் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது நீதிமன்றத்தால் பல குழந்தைகளை நான் பாரப்படுத்தினேன். அந்தக் குழந்தைகளின் சட்ட ரீதியான தந்தை நான் தான். அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் நீதிமன்றின் கையில் என்று அன்று சொன்னார்கள். நான் அகிலாண்டேஸ்வரி அருளகத்தில் இத்தகைய செல்வாக்குள்ள குழந்தைகளாக இன்று இவ்வளவு பெருந்தொகையான மக்கள் முன்னிலையில் பரதநாட்டியம் ஆடி உங்களை எல்லாம் மகிழ்வித்த காட்சி என் கண்களை கலங்க வைக்கிறது. எங்களுக்கு தாய் தந்தையர்கள் உண்டு. அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் தான் தாய் தந்தையர் என்பதை மறந்துவிக்கூடாது. அவர்கள் தெய்வீகக் குழந்தைகள். தெய்வத்தின் குழந்தைகள்.

நீதிமன்றத்தால் பாரப்படுத்திய குழந்தைக்கு திருமணம் நடந்தது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். சாட்சியாகக் கையொப்பமிட்டேன். வவுனியாவை விட்டு அகன்று சென்றேன். இங்கு விபுலானந்தா கல்லூரி பெரியவர் இருக்கின்றார். நான் கல்முனையில் இருந்தேன். இன்று யாழ்ப்பாணத்தில் இருக்கின்றேன். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மூலை முடுக்கெல்லாம் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு நீதிபதி. அந்த வகையில் யாழ்ப்பாணம் உதவி செய்கிறது, மட்டக்களப்பு உதவி செய்கிறது என்று சொன்னால் ஆனால் வேல் ஆனந்தன் ஐயா சொன்னார் இருவரையும் இணைத்து வைத்தது வன்னி மண் என்று. அந்த வகையில் இக்குழந்தைகளின் தெய்வீகம் பொருந்திய பரதநாட்டியம் திருமதி.சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் நெறியாள்கையில் மிகவும் பாராட்டப்படவேண்டியது. தயவுசெய்து அனைவரும் எழுந்து நின்று அந்தக் குழந்தைகளுக்கும், சூரியயாழினி ஆசிரியருக்கும், பாடகர் குழுக்களுக்கும் கரகோசத்துடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்.
அன்புள்ளம் கொண்ட வவுனியா சகோதரர்களே ஒன்பது ஆண்டுகள் நீதிபதியாக நான் கடமையாற்றினேன். அது எனது தொழில். ஆனால் வவுனியாவில் நான் நித்திரை கொண்டது மிகவும் குறைவு. அந்தக் குழந்தைகளை நினைத்து நான் என் கண்கள் கலங்கியது. ஆனால் இந்த நவரத்தினராசா ஐயாவிடம் நாங்கள் பாரப்படுத்தியபோதும் அங்கே அவர்கள் நடத்திய விதங்கள், அங்கே அவர்களைப் பார்க்கின்ற, மேற்பார்வை அனைத்தையும் பார்க்கின்ற போது எங்களை விட மேலான தந்தையாக அவர் காணப்படுகின்றார். அந்தப் பெரியவருக்கு எல்லோரும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். கண்கள் சிந்தி கண்கள் சிதறின கண்ணீர் சிந்தியது. அந்தக் குழந்தையின் உருத்திர தாண்டவ நடனம் வித்ரூப நடனம். அந்த நடனத்தைப் பார்க்கும் போது வேலானந்தன் ஐயா ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அள்ளி முத்தம் கொடுத்தார். அதைப்பாருங்கள். அந்த உணர்ச்சியின் உச்சக்கட்டம். அப்படியொரு ஆட்டம் அந்தக் குழந்தையில் காணப்பட்டது. அது பரதநாட்டியம் அல்ல. அந்தப் பரதத்திற்கு ஒரு பிள்ளை உயிரைக் கொடுத்து ஆடியது. அது சிவனுடைய தாண்டவ ஆட்டம். அந்த ஐந்து குழந்தைகளும் தங்களை மறந்து தங்களது உடலுக்குள் உயிராக பரதநாட்டியத்தை நேசித்து இந்தப் பெரு ஜனங்களின் முன்னிலையில் மிகப்பெரிய ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்தை இன்று ஏற்படுத்தி உள்ளார்கள்.
இங்கு அகளங்கன் ஐயா எழுதிய ஒரு பாடல் எங்கள் கண்களை கசிய வைத்தன. என்னையும் சேர்ப்பாயா அந்தக் குழந்தை இறுதியாக கண்ணீர் சிந்திய வண்ணம் தன்னையும் சேர்ப்பாயா என ஆண்டவன் சன்னிதானத்தில் கோரிக்கை விடுவது போன்ற அந்தக் காட்சி அனைத்து உள்ளங்களையும் கசிய வைத்த காட்சி அது நளினமல்ல, நடனமல்ல, அது உண்மைக்கதை. அது நிழல் அல்ல, நிஜம். அந்தக்குழந்தைகளின் நிஜம். அக்குழந்தைகளின் நிஜ வாழ்க்கை. அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் தஞ்சம் புகுந்துள்ள அந்தக் குழந்தையினுடைய அவலக்குரல். அந்தக்குரல் ஆண்டவன் சன்னிதானத்தில் முன்வைத்த கும்பிட்ட குரல். அந்தக்குரலுக்கு அகிலாண்டேஸ்வரியும் அங்கே உள்ள சிவனும் அருகே உள்ள நயினை அம்மனும் மிகவும் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஐந்து குழந்தைகளையும் five stars என்று சொல்கிறோம். இன்று ஐந்து நட்சத்திரங்கள் நடனமாடி உங்களை மகிழ்விக்கின்றார்கள். பரதநாட்டியத்தை நான் இதுவரை பொழுது போக்கு நடனமாகப் பார்த்தேன். சிலநேரம் பிரதமவிருந்தினர் என்று போய் பிரதமவிருந்தினர் உரையை நிகழ்த்தி விட்டுப் போனேன். இன்று என் மனதில் உணர்வுகள் ததும்பி உள்ள அறிவுடன் இந்த மண்டபத்திற்கு வந்தேன். அக்குழந்தைகளுக்காக ஒரு மணிநேரம் தாமதமாக வந்ததிற்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன். ஏனென்றால் அந்தக் குழந்தைகளின் நடனம் கட்டாயமாக பார்க்கவேண்டியது. தந்தை மட்டுமல்ல சட்டரீதியான பாதுகாவலர் முறை மட்டுமல்ல சட்டரீதியான தந்தை முறை மட்டுமல்ல அந்தக் குழந்தைகளினுடைய எதிர்காலம் ஒவ்வொருவரினதும் கையிலும் உள்ளது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

அந்தக் குழந்தைகள் அருளகக் குழந்தைகள் மட்டுமல்ல. எந்தக் குழந்தைகளாய் இருந்தாலும் அவர்களை நாம் நேசிக்க வேண்டும். அவர்கள் தெய்வத்தின் குழந்தைகள். தெய்வத்தின் பிறப்புக்கள். நான் 2002 நீதிபதியாக இருந்தபோது இம்மூன்று இக்குழந்தைகளுக்கும் எட்டு வயது என்னுடைய மடியில் இருந்தார்கள். எட்டு வயதுக்குழந்தைகள் இன்று பருவ மங்கைகளாகி பரதநாட்டியம் ஆடி உருத்திர தாண்டவம் ஆடுகின்ற காட்சியை பார்க்கும் போது அருளகத்தை நடத்துகின்ற அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் அருளும் அங்கே இருக்கின்ற காப்பாளர்களின் திறனும் அவர்களினுடைய வழிகாட்டல்களுமே இன்று அந்தக் குழந்தைகள் தங்களையே மறந்து ஆடுவதை கண்டுகொண்டார்கள். திருமதி.சூரியயாழினி வீரசிங்கம் அவர்களுக்கு நான் தலைவணங்குகின்றேன்.
இந்தக்குழந்தைகள் ஐவரையும் ஒன்றாக்கி ஒரே மேடையில் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்துவது சாதாரண விடயம் அல்ல. மிகவும் கடினமான விடயம். அதை ஒரு சவாலாக எடுத்து இந்த மேடையில் ஜனங்கள் முன்னிலையிலே அந்த மாணவர்களைக் கற்பித்து அரங்கேற்றி உள்ளார். அவர்களுடைய ஆசிரியர் சூரியயாழினி வீரசிங்கம் அவர்கள். அவருக்கு நன்றியுடன் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.





