காணாமல் போன ஜாம்பவான்கள் : ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் நிலை என்ன?

423

Asia cup

ஆசியக்கிண்ண வரலாற்றில் முதன்முறையாக T20 போட்டிகளாக நடக்கும் இந்த தொடர் எதிர்வரும் 24ம் திகதி முதல் மார்ச் 6ம் திகதி வரை நடைபெறுகிறது. ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி அதிகமாகவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஆசியக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி, இதுவரை 5 முறை கிண்ணம் வென்றுள்ளது.

ஆனால் நடப்பு சம்பியனாக களமிறங்கும் இலங்கை அணியின் நிலைமை இந்த ஆசியக்கிண்ணத் தொடரில் மிகவும் மோசமாகவே உள்ளது. குறிப்பாக T20 போட்டிகளில் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.அனுபவ வீரர்களான சங்கக்கார, ஜெயவர்த்தன ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி அதிகமாகவே தடுமாறி வருகிறது.

2014ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணி அதன் பின்னர் நடைபெற்ற 10 T20 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது . இது அந்த அணியின் மோசமான நிலையையே காட்டுகிறது.

இருப்பினும் ஆசியக்கிண்ணம் மற்றும் T20 உலகக்கிண்ணத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் இலங்கை அணி அனுபவ வீரர்களையும், இளம் வீரர்களையும் கொண்ட கலவையாக இருப்பதால் சிறப்பாக செயல்பாடு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் 6வது முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்கலாம். தவிர, எதிர்வரும் T20 உலகக்கிண்ணத் தொடருக்கும் சிறப்பானதாக அமையும்.

ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி எதிர்வரும் 25ம் திகதி தகுதிப் போட்டியின் மூலம் நுழைந்த ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.இதைத் தொடர்ந்து வங்கதேசம் (பெப்ரவரி- 28ம் திகதி), இந்தியா (மார்ச் -1ம் திகதி), பாகிஸ்தான் (மார்ச்- 4ம் திகதி) ஆகிய அணிகளை இலங்கை எதிர்கொள்கிறது.

இலங்கை அணி வீரர்கள் விபரம்:-

லசித் மலிங்க (அணித்தலைவர்), அஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமால், திலகரட்ன டில்ஷான், நிரோசன் டிக்வெல்ல, ஷீகன் ஜெயசூர்ய, மலித்த ஸ்ரீவர்த்தன, தசுன் சானக, சாமர கப்புகெதர, நுவான் குலசேகர, துஷ்மந்த சமீரா, திசர பெரேரா, சசித்ரா சேனநாயக, ரங்கன ஹேரத், ஜெப்ரே வன்டர்சே.