|
இந்தியாவிடமிருந்து அம்புலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்வது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் பிரதமருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது இலங்கையில் இவ்வாறானதோர் சேவையை வழங்குவதற்கு எவராவது இருந்தால் அவர்களை இச் சபையில் அறிவிக்கவும் என்று பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றினார். இதன் பின்னர் பந்துல குணவர்த்தன எம்.பி. கேள்வியொன்றை எழுப்பினார். அக் கேள்வியில் இந்தியாவுடன் உடன்படிக்கை செய்து கொள்வதற்கு முன்பதாக இந்தியாவில் அரச சார்பற்ற நிறுவனமொன்றிற்கு இலங்கையில் அம்புலன்ஸ் சேவை ஒன்றை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர். இலங்கையில் இவ்விதமானதோர் சேவையை வழங்குவதற்கு எவரும் இல்லை. அப்படியிருந்தால் அறிவியுங்கள். இந்தியாவில் விசேடமாக கிராமங்களில் அவசர மருத்துவச் சேவையை வழங்க அம்பியூலன்ஸ் சேவை இடம்பெறுகிறது. அதேபோன்று அவசர மோட்டார் சைக் கிள் சேவைகளும் இயங்குகின்றன. எனவே எமது கிராமங்களிலும் இந்தச் சேவையை வழங்குவதற்கே நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதற்கு இந்திய அரசு பணம் செலவழிக்கின்றது. உங்கள் ஆட்சியில் சுகாதாரத்திற்கான நிதி குறைக்கப்பட்டது. நோயாளர்களை கொலை செய்ய வேண்டுமென்றா கூறுகின்றீர்கள். நாம் நோயாளர்களை கொலை செய்யமாட்டோம். அதற்கு தயாரில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். இதன் போது சபையில் எழுந்த ஜே.வி.பி எம்.பி. அநுர திஸாநாயக்க தற்போது இலங்கையில் இந்தியாவின் 100 அம்புலன்ஸ்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. அதற்கு பணம் வழங்கப்படுகிறதா? இல்லையென்றால் அது பரிசாக வழங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் அச் சேவைகளின் சேவை கொடுப்பனவு வழங்கப்படுகின்றது என்றார். அநுர திஸாநாயக்க எம்.பி கேள்விக் கோரல் இல்லாமல் இச் சேவை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா எனக் கேட்டபோது, பிரதமர் தனது பதிலில் இது தொடர்பான முழுத் தகவல்களை அச் சபைக்கு விரைவில் வழங்குவோம். இதன் போது எதிர்த் தரப்பினர் மீண்டும் இலங்கையில் இவ்வாறான அம்புலன்ஸ் சேவையை வழங்க எவரும் இல்லையா?. ஏன் இந்தியாவின் சேவையை பெறவேண்டும் எனக் கேள்வியெழுப்பினர். இதன்போது பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று இடதுசாரிகள் எனத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்வோர். முதலாளித்துவத்தை பாதுகாக்கும் பாதுகாவலர்களாகவே செயற்படுகின்றனர். என்னிடம் திருடர்கள் தொடர்பான பைல்கள், தகவல்கள் உள்ளன. திருடர்களின் பெயர்களை வெளியிடலாம். ஆனால் நான் அதனை செய்யவில்லை. கடந்த காலங்களில் நோயாளர்களை கொன்ற சுகாதாரத்திற்கு நிதியை குறைத்த இலவச சுகாதார சேவையை இல்லாமல் செய்தவர்களே இன்று அம்புலன்ஸ் சேவை தொடர்பாக பேசுகின்றார்கள். |






