சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் பயிற்சி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி. இலங்கை அணி இறுதிவரை போராடி தோல்வி..

538


சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் பயிற்சி போட்டியில் இந்திய அணி  243 ஓட்டங்கள் வித்தியாசத்தில்,மாபெரும் வெற்றி பெற்றது. மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தினேஷ் கார்த்திக் சதம்  அடித்தார் . அவுஸ்திரேலிய அணி 65 ஓட்டங்களுக்கு பரிதாபமாக அனைத்து விக்கட்டுகளையும் இழந்து படு தோல்வி அடைந்தது.

இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோனி , துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 55 ஓட்டங்களுக்கு  5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் தினேஷ் கார்த்திக், டோனி இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர் .ஆறாவது விக்கெட்டுக்காக 211 ஓடங்கள் சேர்த்த நிலையில், டோனி 91 ஓட்டங்களுடன் வெளியேறினார்.



இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ஓட்டங்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 146 ஓட்டங்களுடனும் ஜடேஜா 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அவுஸ்திரேலியா சார்பில் மிட்சல் , மெக்கே இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியஅணிக்கு உமேஷ் யாதவ் எமனாக மாறினார். இவரது பந்துவீச்சில் அவுஸ்திரேலிய முன்னணி வீரர்கள் தொடர்ந்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 23.3 ஓவரில் 65 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. இந்தியா சார்பாக உமேஷ் யாதவ் 5 இஷாந்த் சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர்.



மேற்கிந்தியதீவுகள் இலங்கை அணிகள் விளையாடிய மற்றொரு பயிற்சி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியதீவுகள் அணி 6 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
சார்லஸ் 58 ஓட்டங்களையும் பிராவோ 71 ஓட்டங்களையும் சர்வான் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர் .இலங்கை அணி சார்பில் திசார பெரேரா, எரங்க தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.



கடின இலக்கை துரத்திய இலங்கை அணியில் குசால் பெரேரா 24 , ஓட்டங்களையும் ஜெயவர்தன 29 ஓட்டங்களையும் சங்ககார 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இறுதிவரை போராடிய தில்கார 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். குலசேகர இறுதிவரை போராடி ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.


இறுதிவரை போராடிய இலங்கை அணி 47 ஓவரில் 280 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேற்கிந்தியதீவுகள் அணி சார்பாக பிராவோ 3, ராம்போல், நரைன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

~கேசா~