அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் : நேரடியாக பார்வையிட்ட : சி.சிவமோகன் எம்.பி!!

516

DSC_1552

தற்போது தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை இம்மாதம் 23ம் திகதியில் இருந்து ஆரம்பித்திருக்கிறார்கள். நேற்றய தினம் மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த 14 கைதிகளை சென்று பார்த்திருந்தேன், அதே போல் அனுராதபுரம் சிறையில் 02 கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதாக கேள்வியுற்றேன். இந்த 14 கைதிகளும் 3 தொடக்கம் 5 வருடங்களாக விசாரனைக்கைதிகளாக மஜிஸ்ரேட் நிதிமன்றத்தில் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டவண்ணம் உள்ளனர்.

மேலும் இவர்களுக்கு எதிராக எதுவித குற்றச்சாட்டுக்களும் தெரிவிக்கப்படவில்லை என வவுனியாவில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.

அவர் மேலும் தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தைப்பற்றி கூறுகையில்

இக்கைதிகளின் கோரிக்கைகளாக
1. அனைத்து அரசியல் கைதிகளுக்கும் உடன் நீதிமன்ற பிணை வழங்கப்பட வேண்டும்
2. அது இயலாத பட்சத்தில் அனைவருக்கும் சிறிய கால புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்
3. நீதிமன்ற பிணை வழங்கப்பட்டவர்களோ, புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களோ மீண்டும் ஒரு பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்படக்கூடாது.

எனவே இக்கோரிக்கைகள் வெளியுலகத்திற்கு குறிப்பாக ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும் என சாகும்வரை உண்ணாவிரதத்தை இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், இக்கைதிகள்மேல் எதுவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் அவர்கள்மேல் ஒரு பழியை, இந்த பெரும்பான்மையினம் தனது மேலான்மையை நிலைநிறுத்துவதற்காக பொலிஸ் ஊடகவும், நீதித்துறையுடாகவும் அழுத்தங்களை மாத்திரம் பிரயோகித்துக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் நீதி செத்துவிட்டது, சட்டத்தின் ஆட்சி இங்கு உருக்குலைந்து போயுள்ளது என்பது வெளிப்படையாகிறது.

இங்கு தமிழர்களின் வாழ்வு சிங்கள தேசத்தில் என்றும் உறுதிப்படாது எனபதை இந்த கைதிகளின் விடயம் காண்பிக்கின்றது. இந்த கைதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் வைத்து தொடர்ச்சியாக அடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே நீதி நியாயங்களை பேசும் இந்த நல்லாட்சியரசு இந்த ஆதாரங்களை உடனடியாக வெளிப்படுத்தி இந்த கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவும்,

86 தமிழ் அரசியல் கைதிகளில் 14 பேர் வழக்கு தாக்கல் செய்யப்படாதவர்கள், மீதியாக இருப்பவர்கள் வழக்கு நடந்துகொண்டிருப்பவர்களும் தீர்ப்பு வழங்கப்பட்டவர்களுமே இருக்கின்றார்கள். இவர்களுக்கான வழக்கை பேசுவதற்கு சில பொது நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. ஆனால் தங்களுக்கான வழக்கை பேசி வெல்லுவதற்கு தாங்களே தெரிவு செய்து கொள்ளுவது நல்லது இந்த சட்டத்தரணி விடயத்தில் ஒர் அளவுக்கு மேல் பொறுப்பேற்பது சற்று கடினம் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்கள் அரசியல் கைதிகள் சம்மந்தமான ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அப்பிரேரணை வருகிற 8ம் திகதி விவாதத்திற்கு வரும் போது பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகவும் இதனால் மக்கள் அனுபவிக்கும் பாதிப்புக்கள் பற்றியும் விவாதிக்கப்படுவதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பானது தன்னாலான சகல முயற்சிகளை இது சார்பாக எடுத்துக்கொண்டிருக்கின்றது என கூறினார்

மேலும் அரசியலமைப்பு சார்பாக 3 விடயங்கள் தான் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதாகவும் அவை

1. மக்களின் தேசிய பிரச்சனையை தீர்த்து வைப்பது
2. ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது
3. தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருவது போன்றன என்றும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள பேரினவாதம் வழங்கும் அடிமை சாசனத்தை ஏற்றுக்கொள்ளும் நிலை நிச்சயமாக இல்லை எனவும் தமிழ் மக்களின் உரிமைகள் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புதான் மக்களுக்காக போராடும் இறுதியான ஒரு அமைப்பு, இவர்கள் தமிழர் விடுதலை சம்மந்தமாகவும் இந்த அரசியல் யாப்பு மாற்றத்தில் சாதகமான பதில் வராதவிடத்து மீண்டும் அகிம்சைப் போராட்டங்களை அதாவது உண்ணாவிரதம், சத்தியாகிரகம், மௌன ஊர்வலங்கள் போன்றவற்றை நடாத்துவோம் எனவும் தெரிவித்தார்.