நல்ல பிரஜைகளை இன் நாட்டிற்கு வழங்கும் உற்பத்தி நிலையங்கள் பாடசாலைகள் : சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

482

Sathyalingam

நல்ல பிரஜைகளை இந்த நாட்டிற்கு வழங்கும் உற்பத்தி நிலையங்கள் பாடசாலைகள் ஆகும். கல்விமான்கள், வைத்தியர்கள், பொறியிலாளர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள், சட்டவாளர்கள் என்பதற்கு அப்பால் சிறந்த மனிதர்களை உருவாக்கவேண்டிய கடமை பாடசாலைகளுக்கு உண்டு.

இன்று நமது சமூகத்தில் நடக்கும் வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகம் என்பன பற்றி நினைக்கும்போது நாமெல்லாம் வெட்கிதலைகுனிய வேண்டியுள்ளது. ஒருகாலத்தில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்து போது இவ்வாறான சம்பவங்கள் மாற்றுத்தரப்பினரால் நடந்தேறின. அவற்றிற்கு எதிராக போராட்டங்களை நடாத்தினோம். ஆனால் இன்று நம் துரதிஸ்ரம் எமது சமூகத்தற்கு எதிராகவே கிளந்து எழும் நிலை உருவாகியுள்ளது என வடக்குமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு புளியங்குளம் ஆரம்பபாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்

உலகின் மிகப் பழமையான மொழி, கலாசாரம், பண்பாடுகள், சமூக கட்டுப்பாடுகளை கொண்ட நம் சமூகத்தின் இன்றைய நிலையயை நினைத்து மனம் சஞ்சலப்படுகிறது. ஒரு மனிதனின் நடவடிக்கைகளை சட்டத்தால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. சட்டமென்பது மனிதனால் மனிதனைக்கட்டப்படுத்த இயற்றப்பட்டதொன்றாகும். ஆனாலும் மனச்சாட்சி என்பது மனிதன் இந்தபூமியில் அவதரிக்கும் போதே அவனுடன் கூடப்பிறந்ததொன்றாகும்.

எனவே மனிதனுள் மனிதத்தன்மையை வளர்த்தெடுக்க பாடசாலைக் கல்வி மிகமுக்கிய பங்காற்றுகின்றது. அதிலும் ஏட்டுக்கல்விக்கு அப்பால் இவ்வாறன விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது மாணவர்களின் உடல், உளவளர்ச்சிக்கு மிகஅவசியமாகும். ஆனாலும் இன்றைய அவசர உலகில் இவ்வாறான இணைப்பாடவிதான நடவடிக்கைகளில் எமது பிள்ளைகளை ஈடுபடுத்துவதற்கு பெற்றோர் முக்கியத்துவம் வழங்குவது குறைந்துவருகின்றது.

ஆண்டு ஒன்றிலிருந்தே ரியூசன் வகுப்புகளிலும் ஆண்டு 5ல் புலமைப்பரிசிலில் ஆரம்பித்து பல்கலைகழகம் செல்லும் வரைபிள்ளைகள் பாடசாலை, ரியூசன் கல்வி என்ற சிறியவட்டத்திற்குள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சிறுவர்கள் தமது மதக் கடமைகளைக்கூட நிறைவேற்றுவதற்கு நேரம் கிடைப்பதில்லை.வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் பாருங்கள், பலகோவில்களில் பூசைநேரத்தில் பூசாரியைதவிரவேறுயாரும் இல்லை.
இந்த நிலமைமாறவேண்டும்.

பாடசாலைக்கல்விக்கு சமாந்திரமாக விளையாட்டு, கலாசாரநிகழ்ச்சிகள், சமயநடவடிக்கைகள் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துவதனூடாகவே இந்தசமூகத்திற்கு சிறந்த பிரஜைகளை வழங்கமுடியும்.

எனக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியில் கல்வி அபிவிருத்திக்காக இயலுமானவரை நிதியொதுக்கீடுகளை செய்துவருகின்றென். கடந்த வருடம்கூட இந்தபாடசாலையின் குடிநிர் வசதியை மேம்படுத்தவதற்காக எனது ஒதுக்கீட்டில் நிதி வழங்கியுள்ளேன். இந்த வருட நிதியிலிலும் குறிப்பாக பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன்.

சிறுநீரகம் செயலிழக்கும் பிரச்சனை தற்போது மோசமாக பரவிவருகின்றது. அதிகூடிய உரப்பாவனை, நஞ்சுமருந்து பாவனை என்பன இதற்குகாரணமாக கருதப்படுகின்றது. அதிலும் வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி, செட்டிகுளம், வவுனியா தெற்கு பகுதிகளில் இதன் தாக்கம் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. ஆகக்குறைந்தது இந்த சிறுவர்களுக்காவது பாசாலை நேரங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத்தெரிவித்தார்.