
மாற்றுத் திறனாளிகளின் சுற்றுலா மகிழ்ச்சிக்காக, யார் துணையும் இல்லாமல் அவர்கள் சுற்றிப்பார்க்கும் வகையில் குஜராத்தில் உள்ள “Tithal Beach” வடிவமைக்கப்படுகிறது. குஜராத்தின் இந்த முயற்சி, மத்திய அரசின் ஏற்போடு நடந்தாலும் இந்தியாவிற்கு முதல்முறையானது. க்ரீஸ் கடற்கரையை முன்னுதாரணமாக கொண்டது.
கடற்கரை மாநிலமான குஜராத்தின் வல்சட் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற Tithal Beach-யில் 3 கி.மீ.க்கு வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக, 1 கி.மீ.க்கு மட்டும் வடிவமைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் யூன் மாதத்தில் பார்வையாளருக்கு திறப்பதற்காக துரிதப்பணிகள் நடந்து வருகிறது.இரண்டாவது கட்டமாக, மேலும் 2 கி.மீ.க்கு அதே வகையிலான வடிவமைப்பு பணிகள் நீட்டிக்கப்படும் என கூறுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் யார் துணையும் இல்லாமல் அவர்கள் வழக்கமாக உபயோகிக்கும் சக்கர நாற்காலிகளில் கடலுக்கு நேரடியாக நெருக்கமாக சென்று ரசிக்கும்படியாக சாய்வு தளங்கள் அமைக்கப்படுகிறது.கடற்கரையில் அவர்களே உணவுகள் வாங்குமாறும் உண்ணுமாறும் வசதியான தாழ்வு முற்றங்கள் அமைக்கப்படுகிறது. பொழுதுபோக்கில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்கென சிறப்பு வசதிகள் செய்யப்படுகிறது.
அவர்கள் புரிந்துகொள்ளும் அளவில் குறியீடு மற்றும் வாசகங்கள் கொண்ட பதாகைகள், சமிக்ஞைகள் வைக்கப்படுகிறது.வீட்டில் உறவினர்கள் மாற்றுத் திறனாளிகளிடம் அன்பு காட்டினாலும், பொது இடங்களில் அவர்கள் உதாசினப்படுத்தப்படுவதால், ஏற்படும் தாழ்வுமனத்தால் சுற்றுலாதலங்களுக்கு வருவதை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.
Tithal Beach போன்ற திட்டங்கள் அவர்களை நிச்சயம் தலை நிமிரச்செய்யும். இது கோவில், பார்க், மருத்துவமனை, சினிமா தியேட்டர் போன்ற இடங்களிலும் பின்பற்ற தூண்டுகோலாய் அமையும்.





