வவுனியா மகாறம்பைக்குளம் கிராமசேவையாளர் அலுவலகம் (215A) கடந்த 23.02.2016 செவ்வாய்கிழமை விசமிகள் சிலரால் அடித்து உடைத்து சேதப்படுத்தியமையைக் கண்டித்து 27.02.2016 சனிக்கிழமை பிரதேச பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிராமசேவையாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று காலை 9.30 மணி முதல் நடைபெற்றது.
இப்பிரதேசத்தல் கடமையாற்ற வரும் அரச அதிகாரிகள், கடையுரிமையாளர்கள், பிரதேச மக்கள் என்போர் சில விசமிகள் உள்ளடங்கிய ஒரு குளுவினரால் அச்சுறுத்தப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
இப்பிரதேச மக்களின் கோரிக்கைகளை கேட்டறிய நேரில் சென்று விசாரித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் உடனடியாக தொலைபேசி மூலம் வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்டு இவ்விசமிகளின் செயற்பாடுகள் சம்மந்தமாகவும், இப்பிரதேச மக்களின் சுமூக வாழ்க்கையை உறுதிப்படுத்த பொலிசார் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
இவருடன் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சமூகமளித்திருந்தனர்.