
ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுகளால்பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலாவதாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சொற்ப ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது.
ஆரம்பம் முதலே விக்கெட்டுக்கள் விழ , அவ்வணி பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. முடிவில் , வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் 17.3 ஓவர்களில் 83 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஏமாற்றம் அளித்தது. இந்திய அணி சார்பில் பண்ட்யா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து இந்திய அணி வெற்றி இலக்கை இலகுவாக அடையுமென எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தானின் மொஹமெட் அமீர் ஆரம்பம் முதலே இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்கள் விழவே , இந்திய அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது. எனினும் விராத் கோஹ்லி பெற்ற 49 ஓட்டங்களின் உதவியுடன் 15.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி வெற்றி பெற்றது.
மேலும் போட்டியின் நாயகனாவும் கோஹ்லி தெரிவானார்.
இப் போட்டியில் இரு அணியினதும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலில் இந்திய அணி குறைந்த ஓட்டங்களுக்கு பாகிஸ்தானை கட்டுப்படுத்தியது, பின்னர் பாகிஸ்தான் சிறிய ஓட்ட எண்ணிக்கை இருந்தபோதும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி போட்டியை விறுவிறுப்பாக்கியது.





