
ஆசியக்கிண்ண டி20 தொடரில் இன்று நடக்கும் 5வது லீக் ஆட்டத்தில் இலங்கை- வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.
புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதன் படி நேற்றுடன் 4 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இதில் இந்தியா 4 புள்ளியுடன் முதல் இடத்திலும், இலங்கை, வங்கதேசம் தலா 2 புள்ளியுடன் 2வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், யூ.ஏ.இ அணிகள் புள்ளிகள் ஏதும் பெறவில்லை.
இந்நிலையில் இன்று நடக்கும் 5வது லீக் ஆட்டத்தில் இலங்கை- வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
இலங்கை அணியை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். டில்ஷான், மத்யூஸ், சந்திமால், சிறிவர்த்தன என துடுப்பாட்ட வரிசை வலுவாக இருந்தும் இலங்கை அணி தடுமாறி வருகிறது.
பந்துவீச்சில் மலிங்க மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். இவரை தவிர மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே செயல்படுகின்றனர்.
வங்கதேச அணி தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. அந்த அணியின் இளம் பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் அபாரமாக பந்துவீசி வருகிறார்.
வங்கதேச அணியில் துடுப்பாட்டமும், பந்துவீச்சும் சிறப்பாக இருப்பதால் அபார ஆட்டத்தால் அந்த அணி இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்.
இரு அணிகளும் டி20 போட்டியில் இதுவரை 4 முறை மோதியுள்ளன. இதில் 4 ஆட்டத்திலும் இலங்கையே வெற்றி பெற்றுள்ளது.
இதனால் தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை 14 ஓட்டங்களில் வீழ்த்திய இலங்கை அணி, இன்று வங்கதேசத்தையும் வீழ்த்தி 2வது வெற்றியை பெற தீவிரம் காட்டும்.





