
பாலியல் குற்றம் இழைப்பவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது. அத்துடன் பாலியல் வன்முறை சம்பந்தமான வழக்குகள் ஒருவருட காலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுதல் வேண்டும்” என மன்னார் மாதர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக்கோரி மன்னாரில் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஆதரவில் பெண்கள் அமைப்பு மன்னார் நகரில் பேரணி ஒன்றை நடத்தியது. அத்துடன் பிரதமர் உட்பட பலருக்கு இது விடயமாக மகஜர்கள் அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டத்திலுள்ள பல பாகங்களிலிருந் தும் வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலுவலக முன்றலில் ஒன்றுகூடி பின் அங்கிருந்து பதாகைகள் ஏந்தியவாறு மன்னார் நகரை வலம்வந்து கோஷம் இட்டு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களைக் கண்டித்துப் பேரணி நடத்தினர்.
இச் சமயத்தில் பெண்கள் பிரிவு பொலிஸ் அதிகாரியிடமும் மன்னார் அரசாங்க அதிபரிடமும் மகஜர்களை நேரடியாக கையளித்ததுடன் பிரதமர் உட்பட பலருக்கு மகஜர்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
இவ் மகஜர்களில் பின்வரும் விடயங்களை முன்மொழிவாக இவர்கள் முன்வைத்துள்ளனர்.
அதாவது இந்தநாட்டில் உள்ள பெண்கள் சிறுமிகளுக்கெதிரான பாலியல் வன்முறை சம்பந்தமான வழக்குகளின் சட்டமானது மீள் திருத்தத்திற்கு உட்படுத்தப்படல் வேண்டும். அதாவது திருத்தப்படும் சட்டத்தில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு பிணை வழங்க முடியாத குற்றமாக்குதல் வேண்டும்.
பெண்கள் சிறுமிகளுக்கெதிரான பாலியல் வன்முறை சம்பந்தமான வழக்குகளில் குற்றமானது ஒரு வருடகாலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுதல் வேண்டும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதுடன், அந்நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டோர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு, அவர்களது சுயதனித்துவம் பாதிக்கப்படாத வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். ‘சுருக்கமுறை விசாரணை’அகற்றப்பட்டு மாவட்ட நீதிமன்றில் அல்லது உயர்நீதிமன்றில் பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளது விசாரணைகள் மேற்கொள்ளப்படல்.
கடந்த காலங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆயிரக்கணக்கில் தேங்கியுள்ள பாலியல் வல்லுறவு சம்பந்தமான வழக்குகளைத் துரித விசாரணைகளை நிகழ்த்துவதன் மூலம் தீர்ப்பளித்தல்
நீதியை அமுல்படுத்தும் அமைப்புகளாகிய காவற்றுறை, நீதிமன்றம், சட்ட மா அதிபர் திணைக்களம் மேலும் நீதியமைச்சு, பெண்கள் விவகார அமைச்சு, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை ஆணைக்குழு போன்ற கட்டமைப்புகள் அனைத்தும் பெண்கள், சிறுவர்கள் தொடர்பாகத் தற்போதுள்ள நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதுடன் இக்கட்டமைப்பு கள் ஆனவை பால் நிலைக் கூருணர்வுடன் எவ்வித பாரபட்சமுமின்றிச் செயற்படும் விதத்தில் திருத்தப்படல் வேண்டும். குறிப்பாகத் தமிழ் மொழிபேசும் உத்தியோகத்தர்கள் உடனடியாக நியமிக்கப்படல் வேண்டும். பெண்கள் உரிமைமீறல்களை ஆய்வு செய்வதற்கான சுயமான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு இக்குழுவானது பெண்களுக்கெதிராக நடைபெறும் சகல வன்முறைகளைத் தடுப்பதற்கான திட்டங்களைத் துரிதகதியில் அமுல்படுத்துவதற்கான அதிகாரத் தைப் பெற்றிருத்தல் வேண்டும் என வேண்டியுள்ளனர்.
இம் மகஜர்கள் நீதியமைச்சர், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர், பொலிஸ் மா அதிபர், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தலைவி, சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன் னடத்தை ஆணையாளர், சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.





