வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கான மக்கள் குறைகேள் நடமாடும் சேவை மார்ச் மாதம் பதினாறாம் திகதி (16.03.2016) நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாண சபையும், வவனியா மாவட்ட செயலகம் மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை ஆகியன இணைந்து நடாத்தவுள்ள இந்த நடமாடும் சேவையில் மாகாண, மத்திய அரசின் கீழுள்ள திணைக்களங்களின் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவை தொடர்பான கலந்துரையாடலொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் செட்டிகுளம் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நேற்று (02.03.2016) நடைபெற்றது.
இதில் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், முதலமைச்சரின் இணைப்பு செயலாளர் சண்முகப்பிரியன், பிரதேச செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நடமாடும் சேவைக்கு வருகைதரும் பொதுமக்களின் நலன்கருதி இலவச போக்குவரத்து சேவைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





