நடிகர் ஆர்யாவை நடிகைகளுடன் இணைத்து தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. இந்த காதல் கிசு கிசுக்கள் உண்மையானது தானா அல்லது அவர் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்படுகிறதா என்று சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. மதராச பட்டணம் படத்தில் நடித்த போது ஜோடியாக நடித்த எமிஜாக்சனுடன் இணைத்து பேசப்பட்டார்.
எமிஜாக்சன் லண்டனை சேர்ந்தவர். அவரை சந்திப்பதற்காக ஆர்யா அடிக்கடி லண்டன் செல்வதாக கூறப்பட்டது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் பரவின. அதன் பிறகு வேறு நடிகர்களுடன் எமி ஜாக்சன் நடிக்க போனதும் இவர்கள் இடையிலான காதல் செய்திகள் அடங்கி போனது.
பிறகு ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்றார்கள். இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தனர். இப்போது ராஜா ராணி படத்தில் நடிக்கிறார்கள். பிரபுதேவாவுடனான காதலை முறித்ததும் நயன் தாராவை வீட்டுக்கு அழைத்து ஆர்யா விருந்து கொடுத்தார். இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவியது.
திடீரென ஆர்யாவும் நயன்தாராவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வதுபோன்று திருமண அழைப்பிதழ் பத்திரிகை அலுவலகங்களுக்கு வந்தது. இதனால் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அது ராஜா ராணி படத்தை விளம்பரபடுத்துவதற்காக வெளியிடப்பட்ட போலி திருமண அழைப்பிதழ் என தெரிய வந்தது.
அது போல் இப்போது அனுஷ்காவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் என செய்திகள் வந்தன. சில தினங்களுக்கு பின் அனுஷ்காவுடன் காதல் இல்லை என ஆர்யா மறுத்தார். இருவரும் இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தை விளம்பரபடுத்துவதற்காக திட்டமிட்டு இந்த காதல் வதந்தி பரப்பப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.