
சிறுவர் காப்பகமொன்றிலிருந்து ஹபராதுவ கல்லூரியொன்றுக்கு வரும் தாய், தந்தையற்ற அநாதைச் சிறுவனொருவன் அக்கல்லூரி அதிபரின் கடும் தாக்குதலுக்குள்ளாகி நேற்று களுகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லூரி ஆசிரியை ஒருவரின் கைப்பையிலிருந்த 170 ரூபா பணத்தைத் திருடியதாக தரம் 5இல் கல்வி கற்கும் இந்த மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே அதிபர் அவரை பிரம்பால் விளாசியிருக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது.காயப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் சேர்க்க எவரும் முன்வரவில்லை.
விடயத்தைக் கேள்விப்பட்ட சிறுவர் காப்பகத்தின் கட்டுப்பாட்டாளரான பெண்மணியும் பாடசாலைக்கு வந்து சிறுவனை பார்வையிட்டபோதும் அவரும் சிறுவனை வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லவில்லை.பாடசாலை முடிந்ததும் சிறுவர் காப்பகத்துக்குச் சென்ற சிறுவன் இரவு உணவையும் உண்ணாமல் படுத்துவிட்டார்.
இந்த அவலநிலையை யாரோ ஒருவர் ஹபாராதுவ பொலிஸாருக்குத் தெரிவித்ததையடுத்து சிறுவர் காப்பகத்துக்கு இரவு 10 மணியளவில் சென்ற பொலிஸார் சிறுவனை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்குமாறு காப்பகக் காப்பாள பெண்மணிக்கு உத்தரவிட்டபின் சிறுவன் களுகல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
இந்தக் காப்பகத்திலுள்ள எல்லா சிறுவர்களும் பெற்றோரை இழந்தவர்கள் அல்லது அவர்களால் கைவிடப்பட்டவர்கள் எனவும்,இவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்தக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டவர்கள் எனவும், அவர்கள் அனைவருமே இந்தக் கல்லூரியிலேயே கல்வி கற்கிறார்கள் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.ஹபாராதுவ பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.





