படப்பிடிப்புக்கென ஒரு ரயில் நிலையம்!!

334

rail

ரயில்களில் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகமாக வருவதைத் தொடர்ந்து திரைப்படத் துறையினரின் தேவைக்காக ஒரு ரயில் நிலையத்தை அமைத்துக் கொடுக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

பிரசித்திபெற்ற மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள வாடி பந்தர் என்ற ரயில் பழுதுபார்க்கும் இடம் திரைப்படப் படப்பிடிப்புக்கு ஏற்றார்போல மாற்றங்கள் செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் இருப்பது போல பிளாட்பார்ம்களும் மற்ற வசதிகளும் இங்கே இருக்கும். ஆனால் மற்ற ரயில் நிலையங்களைப் போல சாதாரண பயணிகள் உள்ளே வர மாட்டார்கள்.

ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் பலவற்றை ஏற்க முடியாத சூழல் உருவாகிவிட்டதன் காரணமாகவே இந்த முடிவு என்கிறார் மத்திய ரயில்வே பேச்சாளர் அதுல் ரானே.
“ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும்- பயணிகளுக்கு தொந்தரவுகள் வரக்கூடாது என்பதால் பலமுறை எங்களால் திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முடிவதில்லை. எனவேதான் இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையில் சில இடங்களை உருவாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.”

திரைப்படக் குழுவினர் எளிதாக சென்றடையக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதால் மும்பையில் உள்ள வாடி பந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், குர்லா மற்றும் மாத்துங்காவில் உள்ள ரயில் மனைகளை மாற்றுவது குறித்து யோசிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வாடி பந்தர் பகுதியில் இருக்கும் ரயில் மனையில் ரயில் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. இந்த இடம் குறித்த படங்கள், ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்படும். பிரத்யேகமாக படப்பிடிப்புக்காக வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் ரயில்வேயின் வருமானம் உயரும் – புகழும் அதிகமாகும் என்று ரயில்வே நம்புகிறது.
சுமார் 160 ஆண்டுகளாக இந்தியர்களின் வாழ்வோடு இழைந்தோடும் ரயில்கள் பல திரைப்படங்களின் கதைக் களமாகவும் இருந்திருக்கிறது. பல படங்களில் கதாநாயகர்களுக்கு இணையாக ரயில்களும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

-BBC தமிழ்-