
இந்தியாவின் செய்யாறு தனி சிறப்பு முகாமில் இருந்த, நான்கு இலங்கைத் தமிழர்கள், திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து, செய்யாறு சிறப்பு முகாம் மூடப்பட்டது.
செய்யாறு பொலிஸ் நிலையத்திற்கு அருகே உள்ள கிளைச் சிறைச்சாலை, வருவாய்த் துறை சார்பில் சிறப்பு முகாமாக மாற்றப்பட்டு, கடந்த, 2014 ஜூன், 6ம் திகதி முதல் செயல்பட்டு வந்தது. இதில், அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினர், போலி பாஸ்போர்ட் மற்றும் விசா வைத்திருப்பவர்கள், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள், சிறை வைக்கப்பட்டு வந்தனர்.
இந்த முகாம் தொடங்கப்பட்டபோது, ஆறு நைஜீரியர்கள், மூன்று பங்களாதேஷத்தினர், 24 இலங்கைத் தமிழர்கள் என, மொத்தம், 33 பேர் இங்கு அடைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்களில், 29 பேர் விசாரணை முடிந்து, கடந்தாண்டு விடுவிக்கப்பட்டனர் என, தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.
மீதமிருந்த ஜெயரதன் (29), ஆனந்தரூபன் (45), குமரகுரு (39), தயாபரராஜ் (31), ஆகிய, நான்கு இலங்கை தமிழர்கள் மட்டும், இங்கு அடைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்களது தண்டனை காலம் முடிவடைந்தும் விடுவிக்காததால், இவர்கள், நான்கு பேரும், தங்களை விடுவிக்கக் கோரி, அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களின் பாதுகாப்புப் பணிக்காக, 80க்கும் மேற்பட்ட பொலிசார் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், இவர்கள் நான்கு பேரையும், நேற்று முன்தினம் மாலை, பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் திருச்சி முகாமுக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, கடந்த, 2 ஆண்டுகளாக தனி சிறப்பு முகமாக செயல்பட்டு வந்த செய்யாறு கிளைச் சிறைச்சாலை, நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டது.





