
உலகை உலுக்கிய சிரியாவைச் சேர்ந்த சிறுவன் அய்லானின் மரணத்திற்கு காரணமான இருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம், துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஏஜியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது, அய்லான் குர்தி மற்றும் அந்தச் சிறுவனின் சகோதரன், தாய் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
மேற்படி விபத்து தொடர்பாக பொத்ரும் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், படகுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ததற்காக முவாஃப்கா அலாபஷ் மற்றும் ஏஸம் அல்ஃப்ராத் ஆகிய இருவருக்கு ஆள் கடத்தல் வணிகத்தில் ஈடுபட்டமைக்காக கடந்த வெள்ளிக்கிழமையன்று 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
துருக்கியின் பொத்ரும் நகரில் கரையொதுங்கிய அய்லானின் படம், ஊடகங்களில் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.





