புதுக்குடியிருப்பு வேணாவில் பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பும், வேணாவில் கலைமகள் கலாமன்றத்தின் ஆண்டுவிழாவும் சிவராத்திரி தினமான நேற்றைய நாள் வேனாவில் அம்மன் கோவில் முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு.அன்ரனி ஜெகநாதன், பிரதேச சபையின் கலாச்சார உத்தியோகத்தர் திரு.பிரதீபன் மற்றும் புதுக்குடியிருப்பு மேற்கு கிராம சேவையாளர் திருமதி.தேவகி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கருத்துரைகளை கலாச்சார உத்தியோகத்தரும், வடமாகாண சபை உறுப்பினரும் நிகழ்த்தினர். சிறப்புரையினை வன்னி மாவட்ட பாராளுமனற உறுப்பினரும் வன்னிக் குறோஸ் கலாச்சாரப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆற்றினார். அவர் தனதுரையில்..
இந்துக்கள் புனிதமாகப் போற்றும் சிவராத்திரி தினமான இன்று, பின்தங்கிய இக்கிராமத்தில் நடைபெறும் இந் நிகழ்வில் கலந்து கொள்வதனையிட்டு மனமகிழ்கிறேன். கடந்த யுத்தத்தில் உயிர், உடமைகளை எமது மக்கள் இழந்தாலும் கூட தங்களுடைய கலை கலாச்சாரத்தின் மேல் தங்கள் மனஉறுதியை இழக்கவில்லை.
இதன் எடுத்துக்காட்டாக இப்பிரதேச சிறுவர்கள், கலைஞர்கள் நிகழ்த்துகின்ற கலை நிகழ்வுகள் எடுத்து இயம்புகின்றன. வளங்கள் பற்றாக்குறையாக இருந்தும் கூட இருக்கின்ற வளங்களை வைத்து சிறந்த கலை நிகழ்வுகளை நடாத்துகின்றனர்.
எமது பாரம்பரிய கலை, கலாச்சாரங்களை கட்டிக் காக்கவேண்டும் என்பதற்காக எனது சிந்தனையில் வன்னி குறோஸ் கலாச்சாரப் பேரவை உதயமாகி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த கலைஞர்களின் வளர்ச்சியில் புத்திஜீவிகள், கல்விமான்கள், கலையார்வம் கொண்டவர்கள் போன்றவர்கள் ஊக்கமளித்து, எங்கள் கலை கலாச்சாரங்களை கட்டிக்காக்க வேண்டும். இதற்காக என்னுடைய பணி தொடர்ந்த வண்ணமே இருக்கும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வில்லிசை, நடனம், காத்தவராயன் சிந்து நடன கூத்து என்பன இடம்பெற்று பரிசளிப்பும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.






