வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கான உணவை களவாடுவதை அனுமதிக்க முடியாது : சு.வரதகுமார்!!

524

 
உலக உணவுத்திட்டம் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கான உணவை அதிபர்களோ ஆசிரியர்களே களவாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்ககூடாது என வவுனியா நகரக்கோட்டத்தின் உலக உணவுத்திட்ட பொறுப்பதிகாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.வரதகுமார் தெரிவித்தார்.

சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான உணவூட்டல் தினம் வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் அதிபர் சிறிதரன் தலைமையில் கொண்டாடப்பட்டபோது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு உரையாற்றினார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்

உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் மூலம் வறிய மாணவர்கள் பயன்பெற்று தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்கிறார்கள். யுத்த அவலங்களை சந்தித்த மாணவர்களின் குடும்பங்கள் பலர் வறுமையாக வாழ்கின்றார்கள். வறுமையால் வாடும் குடும்பங்களின் பிள்ளைகள் காலை உணவை அருந்தாமலே பாடசாலைக்கு வருகிறார்கள்.

இவ்வாறு வரும் மாணவர்கள் பாடசாலையில் உணவருந்தி படிக்கும் சூழ்நிலையை உலக உணவுத்திட்ட நிறுவனத்தினர் வழங்கியுள்ளமை எமக்கு கிடைத்த வரப்பிரசாதமே. இவ்வாறு வரும் உணவுகளை சில அதிபர்கள் திருட முட்படுகின்றனர். ஆசிரியர்கள் சிலர் திருட முட்படுகின்றனர். இது எவ்வளவு கொடுமையான செயற்பாடு. இதனைத் தடுக்க பாடசாலைச்சமூகம் முன்வரவேண்டும்.

பச்சை மரக்கறிகளின் விலை சந்தையில் அதிகமாக உள்ளது இதனால், அரசாங்கத்தினால் பச்சை மரக்கறி கொடுப்பனவை தலா மாணவர் ஒருவருக்கு 8 ரூபாவால் அதிகரிக்க வேண்டும். இல்லையேல சிறந்த போசாக்கான மரக்கறியை மாணவர்களுக்கு வழங்குவது கடினமான காரியமாகவே இருக்கும்.

இதே போல் சமைப்பதற்கு விறகை பெறுவதிலும் அதிபர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த பிரச்சினைகளை அரசாங்கமே தீர்க்க முன்வரவேண்டும். இதற்காக மாணவர்களிடம் பணம் அறிவிடமுடியாது. மாணவர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன இந்நிலையில் பணம் அறவிடலாமா என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

இவ் உலக உணவுத்திட்ட உணவு வழங்கும் செயற்திட்டமூலம் ஆரோக்கியமான கிராமப்புற மரக்கறிகளை பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் கொள்வனவு செய்வதால் கிராமப்புற விவசாயிகள் பயன்அடைகின்றனர்

வாரத்தில் ஒரு முறையாவது இலைக்கஞ்சியை பாடசாலைகள் வழங்குவது உடல் ஆரோக்கியத்திற்கும் அறிவு விருத்திக்கும் உகந்தது என்றார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

20160303_075845 20160303_080435 20160303_083032 20160303_084703 20160303_084728 20160303_084958 20160303_085000