
சிறு வயதில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்த பெண் இன்று அழகு ராணியாக அவதாரம் எடுத்து வாழ்க்கையில் சாதித்து காட்டியுள்ளார்.இந்த சமுதாயத்தில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக மாற்றி சிகரம் தொடும் பெண்கள் ஏராளம்.அப்படி, தனக்கு வாழ்வில் நேர்ந்த கொடுமைகளை, ஏணிப்படியாக மாற்றியமைத்துள்ளார் Rubie Marie.
இங்கிலாந்தை சேர்ந்த இவருக்கு வங்கதேசத்தை சேர்ந்த நபருடன் 15 வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது, பள்ளிப்பருவ காலத்தில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துக்கொண்டிருந்த இவரின் சிறகினை உடைக்கும் விதமாக வந்தது திருமண பந்தம்.
தனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து Rubie கூறியதாவது, நான் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த காலம் அது, எனது படிப்பை பற்றி சிந்தித்துக்கொண்டும், நண்பர்களுடன் விளையாடிக்கொண்டும் இருந்த எனக்கு திருமணம் என்றால் என்னவென்றே தெரியாது.
ஒரு நாள் எனது தந்தை, உணவினை வைத்து அதன் முன்னால் என்னை அமரவைத்து, நீ திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் எனக்கூறினார், உடனே நான் என் முன்னால் இருந்த உணவுகள் அனைத்தையும் தூக்கி எறிந்தேன்.
ஆனால், எனது தந்தை என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை, எனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்னைவிட 15 வயது மூத்தவர்.அவர் என்னிடம், இந்த திருமணம் குறித்து எந்த மாதிரி உணர்கிறாய்? என்று கேட்டார், ஆனால் அவருடைய கேள்விக்கு நான் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
“என்னை விட்டால் நான் அப்படியே காற்றில் பறந்துவிடுவேன்” என்று எனக்குள் தோன்றியது, ஆனால் அது நடக்காத விடயம் என்று தெரிந்தது.உற்றார் உறவினர்கள் புடைசூழ எனக்கு திருமண நடைபெற்றது.திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள்ளேயே நான் கர்ப்பமடைந்துவிட்டேன், கர்ப்பமாக இருந்த காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் கூட குடிக்காமல் சிரமப்பட்டேன், மேலும் மருத்துவரை அனுகி மருந்துகூட நான் பெற்றுக்கொள்ளவில்லை.
ஏனெனில் எனது தயார் 7 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார், ஆனால் அந்த 7 குழந்தைகளையும் பெற்றுக்கொள்வதற்கு மருத்துவரின் உதவியை நாடியதில்லை என்று தெரிவித்தார், அதுபோலவே என்னையும் மருத்துவரிடம் அழைத்துச்செல்லவில்லை.
ஆனால், எனது கணவர் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவரிடம் சென்ற அனுபவம் இருந்த காரணத்தால், என்னை சிகிச்சைக்காக இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார்.இறுதியில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தை பிறக்கும்போதே மஞ்சள் காமாலை நோயுடன் பிறந்தது, Cytomegalovirus பாதிப்பும் இருந்தது.
ஏனெனில் எனக்கும் இந்த வைரஸ் பிரச்சனை இருந்துள்ளது, என்னிடமிருந்து எனது குழந்தைக்கும் பரவியுள்ளது, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காது கேளாமை மற்றும் ஏதேனும் விடயங்களை கற்றுக்கொள்வதில் இடர்பாடு இருக்கும்.
இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன், மேலும் மருத்துவர்கள், உங்கள் குழந்தை ஊனமுற்று தான் இருக்கும் எனக்கூறினர், ஆனால் காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என எடுத்துக்கொண்டேன்.எனது மகளுக்கு 2 வயது இருக்கும்போது வீட்டை விட்டு வெளியேறினேன், எனது இந்த முடிவு குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக உணர்ந்த பெற்றோர், என்னுடனான தொடர்பினை துண்டித்தனர்.
வீட்டை விட்டு வெளியேறிய நான், இங்கிலாந்தில் எனது 24 வயதில், GCSE படிப்பினை படித்தேன், அதுமட்டுமல்லாமல் மறுபக்கம் மொடலாக ஆகுவதற்கான முயற்சியினையும் எடுத்து வந்தேன்.இந்த முயற்சிக்கு எல்லாம் வெற்றி கிடைக்கும் விதமாக பிரித்தானியாவில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற Ms Galaxy UK போட்டியில் கலந்துகொண்ட எனக்கு வெற்றி கிடைத்தது.
இதில், 30 வகையான போட்டிகள் நடைபெறும், அதில் ஒன்றுதான் விளம்பர மொடல் போட்டி.இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட ரூபி வெற்றிக்கனியை ருசித்துள்ளார், இந்த போட்டியில், அழகு ராணியான தெரிவு செய்யப்பட்ட இவர், விளம்பர மொடலாக அறிவிக்கப்பட்டார்.
இந்த பட்டத்தால் உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கும் ரூபிக்கு, மேலும் சந்தோஷம் தரும் விதமாக Karma Nirvana அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.கட்டாய திருமணம் மற்றும் வன்முறை சார்ந்த செயல்களை தடுப்பதினை நோக்கமாக கொண்டு இந்த Karma Nirvana அமைப்பு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ரூபியின் மகளுக்கு தற்போது 16 வயதாகிறது, மேலும் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.





