
வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இராணுவம் வசமுள்ள அம் மக்களின் தங்கநகைகளை மீளக் கையளிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் உறுதியளித்தார்.
மக்களின் தங்க நகைகள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்கள் சந்தித்து பேச்சுக்களை நடத்துவதற்கு இரண்டு வாரங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடம் நேரடியாகக் கேள்வி கேட்கும் நேரத்தின் போது ஜே.வி.பி. எம்.பி. டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்ட கேள்விக்கே பிரதமர் இப்பதிலை வழங்கினார்.
விடுதலைப் புலிகளின் வங்கிகளில் வட பகுதி மக்களால் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை இராணுவம் கைப்பற்றியது. அத்தொகை எவ்வளவு? தேர்தல் காலங்களில் சிலருக்கு தங்கம் மீள கையளிக்கப்பட்டதே என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விடுதலை புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் 150 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தொகையில் கட்டம் கட்டமாக மத்திய வங்கிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இத் தங்கத்தின் பெறுமதி 131 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். அத்தோடு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பொது மக்களுக்கு மீளக் கையளிக்கப்பட்ட தங்கம் தொடர்பில் முரண்பாடான தகவல்களே உள்ளன. இது தொடர்பில் அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து விரைவில் இச் சபைக்கு அறிவிக்கின்றேன். தற்போது தங்கத்திற்கு சொந்தமானவர்கள் பலரை அடையாளம் கண்டுள்ளனர்.
இது தொடர்பில் விபரங்களை தெரிந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களிடமிருந்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என பிரதமர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திஸாநாயக்க,பிரதமர் அனைத்து கேள்விகளுக்கும் குழு அமைத்து விசாரணை என்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறுகின்றார்.
மக்களின் தங்க நகைகளை மீளக் கையளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே இராணுவத்திடம் தற்போதுள்ள தங்க நகைகளை மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர்-கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் அனைத்தையும் தேடிப் பார்க்க போனால் நிகழ்கால மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துவிடும். அத்தோடு குழுக்கள் அமைத்து தேடிப் பார்ப்பதற்கு காலம் எடுக்கும். எனவே தான் எம்மிடமுள்ள தகவல்களை வழங்குகின்றோம். அதற்கமைய பாராளுமன்றம் உண்மைகளை கண்டறிய வேண்டும். அதனை கண்காணிப்பு குழுக்களும் நிலையிற் குழுக்களும் மேற்கொள்ள முடியும் என்றார்.
இதன்போது மீண்டும் குறுக்கிட்ட அனுர திஸாநாயக்க எம்.பி.
150 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் 30 கிலோ மீளக் கையளிக்கப்பட்டதாகவும் 80 கிலோ இராணுவத்தினரிடம் இருப்பில் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.அப்படியானால் 40 கிலோ கிராம் தங்கம் குறைகிறது. இதற்கு என்ன நடந்தது என்பதை தேடிப் பார்க்க வேண்டியது அரசின் கடப்பாடாகும் என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் இராணுவத்தினர் எனக்கு வழங்கிய அறிக்கை பிரகாரமான விபரங்களையே சபையில் அறிவித்தேன். எனவே உங்கள் கேள்விக்கு முழுமையான தகவல்களை பெற்றுக் கொண்டு பதிலளிக்கின்றேன்என்று கூறினார்.
அநுர திஸாநாயக்க எம்.பி. மேலும்தெரிவிக்கையில், வட பகுதி மக்களின் தங்கம் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடகு வைத்து அதற்கான ரசீதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.அந்த ரசீதுகள் மக்களிடம் உள்ளன அது மட்டுமல்லாது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நகைகள் பொதி செய்யப்பட்ட பொதிகளில் புலிகளின் ரசீதுகள் தொடர்பான “டக்” இணைக்கப்பட்டிருந்தது.எனவே உரிமையாளர்கள் யாரென்பதை அடையாளம் காண முடியும் என்றார். இதன்போது சபையிலிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான ஸ்ரீதரன்;
விடுதலை புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பான ரசீதுகள் மக்களிடம் உள்ளன. அத்தோடு நானும் அவ் வங்கியில் தங்கம் அடகு வைத்துள்ளேன் என்னிடமும் ரசீது உள்ளது என்று தெரிவித்ததோடு முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பெரும்பாலான வர்த்தகர்களின் வாகனங்கள் பல இலட்சங்கள் பெறுமதியான சொத்துக்கள் சேதமாகியுள்ளன. இவர்களுக்கும் நியாயத்தினை பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர்- தங்க நகைகள் மக்களுக்கு மீளக் கையளிப்பது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்இ மத்திய வங்கி ஆளுநர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யினர் சந்தித்து பேச்சுக்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். அத்தோடு வடமாகாண மக்களின் வாழ்வதாரத்தை மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும் என்றார்.





