துபாய் அபுதாபியில் பலத்த மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!(வீடியோ)

1076

Dubai-Rain-Pictures

ஐக்கிய அரபு நாட்டில் துபாய்,அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதித்துள்ளது.

கன மழை காரணமாக வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் பெரு வெள்ளம் காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் பாடசாலைகள் மூடப்பட்டன. ஏரளாமான வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

வீதிகளில் ஆறு போல் வெள்ளம் பெருகி கார்களை அடித்துச் சென்றன. அடிக்கும் பேய்க் காற்றுக்குத் தாங்காமல், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பொலிசார் எச்சரித்துள்ளனர்.

தொடரும் மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், இணைய பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன.

அடுக்குமாடிகள், நட்சத்திர விடுதிகள் எல்லாம் காற்று மழைக்கு தாக்குபிடிக்கமுடியாமல் ஜன்னல்கள், கதவுகள் உடைந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கின்றன.

கனமழை காரணமாக கடந்த நாளின் 7 மணி நேரத்தில் 250க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளது என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். ஆனால் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.