விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அவரது மாமனார் வீட்டில் பதுங்கியிருப்பதாக கூறி பொய்யான தகவலைப் பரப்பிய பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி தன்னுடன் வந்து வாழ மறுத்ததால் மாமனார் குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்படுத்துவதற்காக இப்படி தவறான செய்தியை அவர் பரப்பினார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கே.துரைராஜ் பொறியியலாளராக உள்ளார். இவருக்கும் சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்த செல்வராணி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
துரைராஜ் முதலில் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி நின்று விட்டார். பின்னர் வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வேலை தேடி வந்தார். இந்த நிலையில் துரைராஜ் தனது மனைவியுடன் சேலம் வந்து தனது மாமனார் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தனியே வசித்து வந்தார்.
கரூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு வேலைக்கேட்டு விண்ணப்பித்து இருந்தார் துரைராஜ். அந்த கல்லூரியிலிருந்து வேலை நியமன உத்தரவு சில நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்து. தனது முகவரியாக மாமனார் வீட்டு முகவரியைக் கொடுத்திருந்தார் துரைராஜ்.
எனவே கடிதம் துரைராஜ் மாமனார் வீட்டுக்குப் போனது. ஆனால் மாமனார் வீட்டில் இதுகுறித்துக் கூறவில்லை. தபாலையும் துரைராஜிடம் தரவில்லை. இதனால் வேலை போய் விட்டது. இந்த நிலையில் விஷயம் அறிந்து பெரும் வருத்தமடைந்தார் துரைராஜ்.
தனது மனைவியிடம் அவர் சண்டை பிடித்தார். இதனால் துரைராஜின் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குப் போய்விட்டார். பலமுறை மனைவியை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வெறுத்துப் போன துரைராஜ் தனது மாமனாரால்தான் இத்தனை குழப்பமும் என்று நினைத்து குடும்பத்தோடு பழிவாங்க முடிவெடுத்தார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகளுக்கு ஒரு தவறான குறுந்தகவலை அனுப்பினார். அதில் சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி. நகரில் வசிக்கும் பட்டறைக்காரர் மணி, பாப்பாத்தி, தர்மலிங்கம், கார்த்தி ஆகியோருடன் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தங்கி உள்ளார் என்றும் இவர்கள் அனைவரும் சேலத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சிக்கிறார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்தத் தகவலைப் பெற்ற டெல்லி சிபிஐ அதிகாரிகள் தமிழக காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர் . சென்னை, சேலம் பொலிஸாரும் உஷார்படுத்தப்பட்டனர். சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் கடந்த இரண்டு நாட்களாக கிச்சிப்பாளையம் பகுதியில் விசாரித்து வந்தனர்.
பிறகு துரைராஜின் மாமனார் மணியின் வீட்டில் ஏராளமான பொலீசார் குவிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போது அங்கு விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் இல்லை என்றும் தெரியவந்தது.
பின்னர் பொலீசார் நடத்திய விசாரணையில் துரைராஜ் தனது மாமனார் குடும்பத்தை பழிவாங்க இப்படி தகவல் அனுப்பியது தெரியவந்தது. போலீசார் துரைராஜை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் எனது மாமனார் மணி, மாமியார் பாப்பாத்தி, மைத்துனர்கள் தர்மலிங்கம் , கார்த்தி ஆகியோர் எனக்கு வேலை கிடைக்காமல் செய்ததோடு எனது மனைவியையும் பிரித்து சென்று விட்டனர். இதனால் அவர்களை பொலீசில் சிக்க வைக்க டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு விடுதலைப் புலிகள் சேலத்தில் பதுங்கி உள்ளனர் என்று தகவல் அனுப்பி வைத்தேன் என்று கூறினார். அவரைப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.