விபத்தில் நடிகர் மரணம் : மற்றொரு நடிகர் கவலைக்கிடம்!!

511

39688

சென்னை தி. நகரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சினிமா துணை நடிகர் பரிதாபமாக பலியாகி உள்ளார். மற்றொரு துணை நடிகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தி. நகர் சீனிவாசா தெருவில் வசித்து வந்தவர் செல்வ குமார் (58).
ரமணா உள்பட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். தொலைகாட்சித் தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

இவர் நேற்று இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகானா சபாவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர், இரவு 8. 30 மணி அளவில் துணை நடிகரும் தனது நண்பருமான கோவை செந்தில் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

ஆழ்வார்பேட்டை டி. டி. கே சாலையில் இருந்து தி. நகர் பர்கிட் சாலை வழியாக பைக் சென்று கொண்டு இருந்தது. மோட்டார் சைக்கிளை செல்வகுமார் செலுத்தியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் வீதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், பலத்த காயம் அடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

கோவை செந்தில் பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஸ்பீடா மீட்டர் வயர் அறுந்து அந்த வயர் முன் சக்கரத்தில் சிக்கியதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

மேலும் உயிர் இழந்த செல்வகுமார் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் தப்பி இருக்கலாம் என்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.