
சுப்பிரமணியபுரம், சென்னை-28, திருமணம் எனும் நிக்கா, கோவா, ராஜா ராணி, எங்கேயும் எப்போதும், பிரியாணி, வடகறி ஆகிய படங்களில் நடித்தவர், ஜெய். அடுத்து இவர் நடித்து, புகழ் என்ற படம் வெளிவர இருக்கிறது. இது தொடர்பாக, நிருபருக்கு ஜெய் பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெய் அளித்த பதில்களும் வருமாறு..
கேள்வி:- புகழ் எந்த மாதிரி கதையம்சம் உள்ள படம்?
பதில்:- இது, அரசியல் சார்ந்த கதை. பொதுவாக, பிரச்சினைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்கிற இளைஞன் ஒருவன், எல்லா ஊர்களிலும் இருப்பான். புகழ் படத்தில் அப்படிப்பட்ட இளைஞனாக நான் வருகிறேன். இதனால் எனக்கும், ஒரு அரசியல்வாதிக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினை எப்படி தீர்க்கப்படுகிறது என்பதே கதை.
கேள்வி:- உங்களுக்கும், நடிகை அஞ்சலிக்கும் காதல் இருப்பதாக பேசப்படுகிறதே, அது உண்மையா?
பதில்:- 2011ல் எனக்கும், அஞ்சலிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. அவர் தெலுங்கு பட உலகுக்கு போனபின், இரண்டு பேருக்கும் இடையே இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன், நானும் அஞ்சலியும் மீண்டும் சந்தித்துக் கொண்டோம். அப்போது எங்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். சில பொது இடங்களுக்கு சேர்ந்து சென்றோம். எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. அது, காதலாக மாறினாலும் மாறலாம்.
கேள்வி:- இருவரும் திருமணம் செய்து கொள்வீர்களா?
பதில்:- எனக்கு திருமண பந்தத்தில் உடன்பாடு இல்லை. இப்போதைய திருமண உறவுகள் நீடித்து இருப்பதில்லை. பெரும்பாலான ஜோடிகள் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். அதைப்பார்த்து எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை போய் விட்டது. காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால், திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதில் தப்பு இல்லை.
கேள்வி:- அஞ்சலி தவிர, சினிமாவில் உங்களுக்கு வேறு சினேகிதிகள் இருக்கிறார்களா?
பதில்:- நயன்தாரா, எனக்கு நல்ல சினேகிதிதான். அவர் அவ்வப்போது எனக்கு போன் செய்வார். நான் சோகமாக இருக்கும்போதும், குழப்பமாக இருக்கும்போதும் எனக்கு நல்ல ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார். நிறைய முறை இது நடந்திருக்கிறது’’ என்று ஜெய் தெரிவித்தார்.





