வவுனியா கூமாங்குளம் சித்திவினாயகர் வித்தியாலயத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் கடந்த 28.02.2016 அன்று அகில இலங்கை ரீதியில் அம்பேபுஸ்ச சிங்க றெஜிமன்ட் தலமைச் செயலகத்தின் வளாகத்தில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் மூன்று தங்கப்பதக்கத்தையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் தமதாக்கியுள்ளனர்.
கூமாங்குளம் சித்திவினாயகர் வித்தியாலத்தின் பழைய மாணவி ரீ.தர்சிகா வினோசினி மற்றும் மாணவர்களான நந்தகுமார் மனோகர், தியாகராஜா நாகராஜா, பந்துல சுஜிவலக்மால் ஆகிய நான்கு மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் 48 கிலோகிராம் நிறையுடையவர்களுக்கான குத்துச்சண்டையில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்து தங்கள் பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமைசேர்த்துள்ளதோடு சர்வதேச ரீதியிலும் அவர்கள் சாதிக்க ஆர்வமாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இம்மாணவர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு சரியான உபகரணங்கள் மற்றும் குத்துச்சண்டை மேடை இல்லாத நிலையிலும் வெறும் சீமெந்து நிலத்தில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இன் நிலையில் இவர்களை விளையாட்டுத்துறை அதிகாரிகள், அமைச்சுக்கள் கண்டுகொள்ளாமை மற்றும் கௌரவிக்காமை மிகவும் கவலையளிப்பதாகவுள்ளது.
இவ் வெற்றி குறித்து மாணவர்கள் கருத்து தெரிவித்தபோது..
அகில இலங்கை ரீதியில் தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் சாதிக்க ஆர்வமாகவுள்ளோம். அதற்கான வசதிகள் எங்களுக்கு கிடைக்குமிடத்து சாதிப்போம். அத்துடன் எங்கள் வெற்றிக்கு காரணமாகவிருந்த பாடசாலை அதிபர் மற்றும் பயிற்றுவிப்பாளருக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.
மாணவர்களின் பயிற்றுவிப்பாளரான எஸ்.நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில்..
எனது மாணவர்கள் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது பெருமையாகவுள்ளது. அதேபோல் இலைமறைகாயாக உள்ள வீரர்களை போட்டியில் கலந்துகொள்ள செய்ய முடியும். அவர்களுக்கான உதவிகளை விளையாட்டு அமைச்சு மேற்கொள்ளும் பட்சத்தில் சாதிக்க முடியும் என குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில் இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கும்போது சமூகத்தில் குற்றங்கள் குறைவடையும் என சுட்டிக்காட்டினார்.






