நடிகர் கலாபவன் மணி வயிற்றில் கொடிய விஷம் : உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!!

539

Kalapavan Mani

நடிகர் கலாபவன் மணி மரணம் குறித்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. நடிகரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும் அரசு தயாராக இருக்கிறது என்று கேரள மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி, தெரிவித்தார்.

தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள கலாபவன் மணி கடந்த 6ம் திகதி மரணம் அடைந்தார். பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது குடித்தபோது மயங்கி விழுந்த அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். கலாபவன் மணி உடலை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் இருந்ததாக தெரிவித்தனர்.

உரிமம் பெற்று விற்கப்படும் மதுவில் இவ்வளவு அதிக அளவில் மெத்தனால் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்கள். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கலாபவன் மணியின் குடற்பகுதிகள் ரசாயன ஆய்வுக்காக கொச்சியில் உள்ள வட்டார ரசாயன ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வில் அவருடைய உடலில் கொடிய விஷம் கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஆய்வகத்தின் இணை இரசாயன ஆய்வாளர் முரளிதரன் நாயர் கூறுகையில், கலாபவன் மணியின் வயிற்று குடற்பகுதி மாதிரிகளில் மிகவும் கொடிய பூச்சிக் கொல்லி மருந்தான குளோர்பைரிபோஸ் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இது தவிர, மெத்தனால் மற்றும் எத்தனால்(மது) ஆகியவையும் இருந்தன என்றார்.

எனவே மதுவில் கலாபவன் மணிக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

கலாபவன் மணி மரணம் அடைவதற்கு முன்தினம் அவருடன் மலையாள நடிகர்கள் சாபு, ஜாபர் இடுக்கி ஆகியோர் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். கலாபவன் மணி மது அருந்திய போது நான் அங்கிருந்து சென்று விட்டேன் என்று சாபு வாக்குமூலம் அளித்தார்.

ஜாபர் இடுக்கி, நாங்கள் எல்லோரும் சேர்ந்து மது அருந்தினோம் என்று கூறினார். நடிகர் சாபுவுக்கும், கலாபவன் மணிக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக இணையதளங்களில் தகவல் பரவியது. இதனை சாபு மறுத்துள்ளார். கலாபவன்மணி மரணத்தில் தேவையில்லாமல் என்னை சம்பந்தப்படுத்துகின்றனர். அவருடன் நான் மது அருந்தவில்லை என்று கூறினார்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது அருண், விபின், முருகன் ஆகிய 3 பேரை பிடித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கலாபவன் மணி வீட்டில் வேலை பார்த்தவர்கள். கலாபவன் மணி வைத்தியசாலையில் இறந்ததும் இவர்கள் 3 பேரும் அவசரமாக பண்ணை வீட்டுக்கு திரும்பி வீட்டை சுத்தப்படுத்தி உள்ளனர்.

அங்கிருந்த மதுப்போத்தல்களையும் அப்புறப்படுத்தி உள்ளனர். கலாபவன் மணி வாந்தி எடுத்ததையும் கழுவி சுத்தப்படுத்தி இருக்கின்றனர். தடயங்களை இவர்கள் 3 பேரும் அழித்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். இதனால், 3 பேரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

இதுகுறித்து கலாபவன் மணியின் தம்பி இராமகிருஷ்ணன் கூறும்போது, என் அண்ணனுடன் மது அருந்திய யாரும் பாதிக்கப்படவில்லை. என் அண்ணன் உடலில் மட்டுமே அளவுக்கு அதிகமான மெத்தனால் இருந்து இருக்கிறது. அவர் உயிர் இழப்பதற்கு முன்பாக அவருடன் மது அருந்திய அத்தனை பேர் மீதும் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

காசர்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கேரள மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி, நடிகர் கலாபவன் மணி மரணம் குறித்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. நடிகரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும் அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.