இந்திய, பாகிஸ்தான் போட்டியில் சூதாட்டம் : 4 பேர் கைது!!

564

IND

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து வேலூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது..

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று 2 நாட்டு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

போட்டியை பெரும் ஆவலுடன் இரு நாட்டு ரசிகர்கள் பார்த்தனர். வேலூரில் உள்ள பல்வேறு கடைகளில் உள்ள டி.வி.க்களில் இந்த கிரிக்கெட் போட்டியை பொதுமக்கள் கூட்டமாக நின்று ஆவலுடன் பார்த்தனர். வேலூர் பழைய பஸ் நிலையத்திலும் ஒரு கடையின் முன்பு பொதுமக்கள் கூட்டமாக நின்று போட்டியை பார்த்தனர்.

இதற்கிடையில், வேலூர் பழைய பஸ் நிலையத்தில் சிலர் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் வடக்கு பொலிசார் பழைய பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு 4 பேர் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பொலிசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கருகம்புத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல்சுபான் (வயது 38), மக்கான் பகுதியை சேர்ந்த பாபு (31), கொசப்பேட்டையை சேர்ந்த கார்த்தி (35), கொணவட்டத்தை சேர்ந்த இலியாஸ் (30) என்பது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 பறிமுதல் செய்யப்பட்டது.