வவுனியா மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த விளையாட்டுப்போட்டி இடைநிறுத்தம்!!

503

Sports day

வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெறவிருந்த விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் கிருஸ்ணராஜாவினால் இடைநிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர்..

வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் ஊடாக பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் விளையாட்டப் போட்டிகளுக்கு வழங்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் காரணமாக விளையாட்டு மைதானத்தை வழங்கியிருந்தேன். ஆனால் வவுனியா மாவட்ட செயலகத்தின் விளையாட்டத்துறை அமைச்சின் இணைப்பாளர், விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் அகில இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் உப தலைவர் ஆகியோர் தொடர்பு கொண்டு வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு கோரியதையடுத்து நிகழ்வுகளை ரத்து செய்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

இச்செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை விளையாட்டத்துறை அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.தனுராஜ்..

வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதுடன் மெய்வல்லுனர் போட்டிகளை விளையாட்டுக் கழகங்களுக்கு அறிவிக்காமல் ரகசியமான முறையில் பாடசாலை மட்டங்களில் நடத்தி வருவதுடன் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டங்களையும் நடத்துவதில்லையென குற்றஞ்சாட்டினார்.

ஏற்கனவே வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவருக்கு எதிராக அரசாங்க அதிபர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருக்கும் நிலையில் அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே மெய்வல்லுனர் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவருடன் இணைந்து விழையாட்டு நிகழ்வுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.