பெற்றோரை இழந்து குடும்பக் கஷ்டத்தின் மத்தியிலும் 9A சித்திபெற்று வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவி!!

1711

20160321_132411

வெளியான கா.பொ. த சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி மதனமோகன் சுலக்ஷ்னா 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது வெற்றி குறித்து வவுனியா நெற் இணையத்திற்கு தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட அவர் பின்வருமாறு தெரிவித்தார்..

எனக்கு 2 வயது இருக்கும்போது எனது அப்பா என்னை பிரிந்து சென்றுவிட்டார். எனது அம்மாவும் எனக்கு 14 வயதினிலேயே என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். பெற்றோர் பாசம் எனக்கு சிறு வயதினிலேயே இல்லாமல் போய் விட்டது.

நான் தற்போது அம்மம்மாவுடன் தான் வாழ்ந்து வருகின்றேன். எனக்கு படிப்பதற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கு மேலதிக வகுப்புகளுக்கு (ரீயுசன்) சென்று படிக்க முடியவில்லை.

இருப்பினும் பாடசாலைச் சமூகத்தின் மூலம் சிறு உதவி கிடைக்கின்றது. கடந்த கா.பொ.த சாதாரண தரத்திற்கு மாத்திரம் மேலதிக வகுப்புக்களுக்கு சென்றேன்.

எனது வீட்டிலிருந்து 1 ½ கிலோமீற்றர் தொலைவீல் பாடசாலை காணப்படுகின்றது. தினசரி துவிச்சக்கர வண்டி மூலம் தான் செல்கின்றேன்.

எனது இந்த பரீட்சை பெறுபேற்றினை நான் யாரிடம் கொண்டுசென்று காட்டுவது. எனது பெற்றோர் என்னிடம் இல்லை என மன ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

பெற்றோரை இழந்த நிலையில் குடும்ப கஷ்டத்தின் மத்தியிலும் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த இவருக்கு வவுனியா நெற் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.