என் சோதனை வேறு யாருக்கும் வரக்கூடாது : சண்டிலா உருக்கம்!!

323

Ajit-Chandila

ஆறாவது ஐ.பி.எல் T20 கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோர் பிடிபட்டனர். இவர்களுக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோருடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து மொகோகா எனும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

தற்போது ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோர் பிணையில் உள்ளனர். ஆனால் மற்றொரு கிரிக்கெட் வீரர் சண்டிலாவுக்கு மட்டும் பிணை தரப்படவில்லை. இவர் கடந்த மே 16 முதல் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது சகோதரர் இறுதிச் சடங்குக்காக, இடைக்கால பிணையில் வெளிவந்த சண்டிலா கூறுகையில் வாழ்க்கையில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்று பெரிய கனவு கண்டேன்.

இதை ஓரளவுக்கு நிறைவேற்றி வந்தேன். ஆனால் திடீரென நடந்த துயரமான சம்பவம் காரணமாக, எனது கனவு பாதியில் தூள் தூளாக உடைந்து சிதறி விட்டது. கடந்த இரண்டு ஐ.பி.எல் தொடர்களில் எனது திறமையை மக்கள் பார்த்துள்ளனர். நான் சுத்தமானவன், எந்த தவறும் செய்யவில்லை. ஆனால், என் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பெரிய அதிர்ச்சி. நான் கிரிக்கெட் வீரர் மட்டும் தான், பயங்கரவாதி அல்ல. இது போன்ற சம்பவத்தினால் எனது குடும்பத்தினர் பெரியளவில் பாதிக்கப்பட்டனர்.

எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. விரைவில் மக்கள் உண்மையை அறிந்து கொள்வர். ஏனெனில் எனக்கு சூதாட்டம் குறித்து எதுவும் தெரியாது. இதற்காக யாரையும் ஒருபோதும் அணுகியது இல்லை. நான் ஒன்றுமறியாத அப்பாவி விரைவில் மீண்டு வருவேன்.

தவிர ஐ.பி.எல் கிரிக்கெட் மூலம் நிறைய பணம் கிடைக்கிறது. இந்நிலையில் தவறான பாதையில் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை. எனது ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து அனைவரும் பேசுகின்றனர்.

பொதுவாக எல்லோரும் நல்ல ஆடைகள் அணிவதைத் தான் விரும்புவர் என்றும் இந்நிலையில் அதிக மதிப்புள்ள பொருட்களை அணிவதில் எவ்வித தவறும் இல்லை எனவும் கூறியுள்ளார்.