99ம் இலக்கத்திற்கு போட்டியிடும் அஸ்வின்-மிஸ்ரா!!

356

99

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், அமித் மிஸ்ரா இருவரும் 99 என்ற எண் கொண்ட சட்டை அணிந்து விளையாடுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு ராசியான எண் கொண்ட சட்டை அணிந்து விளையாடுவர். இந்திய அணியின் சச்சின்-10, டோனி-7, ஷேவாக்-44 என்று பல உதாரணம் உண்டு.

இந்தவரிசையில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 99 என்ற எண் கொண்ட சட்டையுடன் விளையாடுவார். தற்போது சிம்பாவேக்கெதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியின் போது மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ராவும் 99 என்ற எண் கொண்ட சட்டையுடன் விளையாடினார்.

இப்போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றிய இவர் இதே எண்ணுடன் விளையாட வாய்ப்பு உள்ளது. தவிர இருவரும் ஐ.பி.எல் தொடரில் சென்னை, ஐதராபாத் அணிக்காக விளையாடிய போதும் 99 எண்ணுடன் பங்கேற்றனர். அஷ்வினுக்கு 7 ஆண்டுக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்றார் அமித் மிஸ்ரா. இதனால் 99 எண்ணுக்கு தாராளமாக உரிமை கொண்டாடலாம்.

இருவரும் சேர்ந்து ஒரே போட்டியில் விளையாடும் நிலை இன்னும் வரவில்லை. சமீபத்தில் முடிந்த சம்பியன்ஸ் கிண்ண தொடர் பயிற்சி போட்டியின் போது, அமித் மிஸ்ரா 9, அஷ்வின் 99 என்ற சட்டையை அணிந்தனர்.

இதில் அமித் மிஸ்ராவை (18) விட அதிக ஒருநாள் போட்டியில் பங்கேற்றதால், அஷ்வினுக்கு (58 போட்டி) இந்த வாய்ப்பு தரப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து அஷ்வின் வெளியிட்ட டுவிட்டர் இணையதள செய்தியில் இரு வீரர்களும் ஒரே எண் தான் வேண்டும் என்று விருப்பப்பட்டால், யார் அதிக போட்டியில் பங்கேற்றுள்ளனர் என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொது முகாமையாளர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில் இரு வீரர்களும் இணைந்து விளையாடாத வரையில் அவர்கள் எந்த எண்ணை விரும்புகின்றனரோ, அதுவே தரப்படும். இருவரும் ஒரே போட்டியில் களமிறங்கும் நிலை வந்தால் வேறு எண் வழங்கப்படும் என்றார்.

இந்தியாவின் சச்சின் ஒருநாள் போட்டிகளில் 10ம் நம்பரை பயன்படுத்தினார். கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற பின் இதை யாரும் பயன்படுத்தவில்லை. மும்பை ஐ.பி.எல் அணியில் சச்சின் ஓய்வு பெற்ற பின் நம்பர் 10க்கு ஓய்வு தரப்படும் எனத் தெரிகிறது.