
ஐதராபாத்தில் இருந்து இன்று காலை மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால் அதில் வந்த 120 பயணிகளும் அவசரவழி வாயிலாக வெளியேற்றப்பட்டனர்.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் இன்று காலை 7.20 மணியளவில் மும்பையில் தரையிறங்கியது. ஓடுபாதை வழியாக ஊர்ந்துச் சென்று பயணிகளை இறக்கிவிடும் இடத்தை நோக்கி நகர்ந்தபோது, என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை எழுந்ததை கண்டு பதற்றமடைந்த விமானி, வயர்லெஸ் மூலமாக இதுபற்றி கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அளித்தார்.
உடனடியாக, மீட்புப் படையினருடன் தீயணைப்பு வாகனங்கள் அந்த விமானத்தை நோக்கி விரைந்து வந்தன. விமானத்தில் இருந்த 120 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட ஆறு சிப்பந்திகள் அவசர ‘சூட்’ வழியாக கீழே இறக்கப்பட்டனர். பின்னர், விமானத்தினுள் சென்று பார்த்தபோது புகை அடங்கிப்போய் இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.





