யாழ். சாவகச்சேரி மரவன்புலோ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், வெடி குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. நேற்றிரவு சாவகச்சேரி பொலிஸாரினால் இவை மீட்கப்பட்டுள்ளன.
யாழ் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சாவகச்சேரி பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவை மீட்கப்பட்டுள்ளது.
இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி,
தற்கொலை அங்கி ஒன்று, 04 கிளேமோர் குண்டுகள், வெடி மருந்துகள் அடங்கிய 03 பொதிகள், 09 மில்லிமீற்றருடைய துப்பாக்கி ரவைகள் 2 பக்கட்டுக்கள் (சுமார் 100 ரவைகள்) ஆகியன உட்பட இரண்டு பக்கட் பட்டரிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கடந்த யுத்த காலத்தின் போது மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-அத தெரன-






