மண்வாசனை..

6


Man

 


தாயின் உதிரம் கருவாகி
பேச்சும் மூச்சும் உருவாகி
கலந்த காற்றில் கனிந்தமர்ந்த
நன்றி நினைவதில் மண்வாசனை.

தத்தித் தவழ்ந்து நடை பழகி
பால்நிலவின் ஒளியில் சோறூட்டி தாய்
கொஞ்சும் மொழி கதை பேசி
வாழ்வின் அர்த்தம் சொல்லும் நினைவது.வேப்பமரத்து நிழல் இருந்து
கூட்டாஞ்சோறு நாம் சமைத்து
குயில் பாடும் பாடல் அது கேட்டு
கொண்டாடிக்களித்த காலமது.

ஆலமரத்து பிள்ளையாரை
காக்குமாறு நான் வேண்டி
கணக்குப் பரீட்சையிலே பயந்து அழுத
நினைவில் மலர்வது மண்வாசனை.


சுற்றம் உறவுகள் உடனிருந்து
பல்சுவையாய் உணவுகள் விதம் விதமாய்
கைப்பக்குவம் இது, இவரென்று
இரசித்து ருசித்த நினைவதிலே மண்வாசனை.

கோயில் திருவிழா பெருவிழாவாய்
வீதியெங்கும் மின்னொளியாய்
பக்தியோடு கைகூப்பி பாலும் பழமும்
மகிழ்ந்துண்ட இனிமை பேசும் மணவாசனை.


வட்டமடிக்கும் காளைகளும்
கண்ணால் பேசும் கன்னிகளும்
மின்னல் பார்வையில் உரசிவிட்டு
சென்ற கதைகள் வெளிச்சம் வரும்.

யுத்தம் வந்து இடம்பெயர்ந்து
ஊர் முழுதும் மாறி,தடம் பெயர்ந்து
ஆள் அறியா நாட்டில் தொலைந்தோம்
தாய் மொழியை பேசாது தவித்தோம் ஏக்கமதிலே மண்வாசனை.

பணத்தால் தேடியும் பெறுவாமா
பாசம் அதிலே நிறைவோமா.
உழைப்பைக் கொடுத்து எதிர்காலம்
உயர்வாய்க் காப்போம் மண்வாசனை.

-குமுதினி ரமணன்-
ஜேர்மனி.