
தெலுங்கு சினிமா இயக்குனர் பூரி ஜெகநாத் மீது விநியோகஸ்தர்கள் தாக்குதல் நடத்தி உள்ளார்கள்.
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் பூரி ஜெகநாத். விஜய் நடித்த போக்கிரி படத்தை இயக்கியவர். இவர் சிரஞ்சீவி சகோதரர் நாகபாபுவின் மகன் வருண்தேஜ் நடித்த லோபர் என்ற தெலுங்கு படத்தை இயக்கினார்.
இந்த படத்துக்கான ஆந்திரா தெலுங்கானா விநியோக உரிமையை அபிஷேக், சுதிர், முத்தியாலா ராம்தாஸ் ஆகியோர் வாங்கி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதற்கான பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் 3 பேரும் ஐதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள இயக்குனர் பூரி ஜெகநாத் அலுவலகத்துக்கு சென்றனர். படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பி தரும்படி தகராறு செய்தனர்.
அதற்கு அவர் நான் படத்தின் இயக்குனர் மட்டுமே என்று கூறினார். ஆனாலும் ஆவேசம் அடைந்த விநியோகஸ்தர்கள் பூரி ஜெகநாத்தை தாக்கினர். மேலும் அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினர்.
உரிய இழப்பீடு தராவிட்டால் உங்களது அடுத்த படத்தை எந்த தியேட்டரிலும் ஓட விட மாட்டோம் என்று மிரட்டி விட்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து பூரி ஜெகநாத் பஞ்சாரஹில்ஸ் பொலிஸில் புகார் செய்தார். பொலிசார் 5க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.





