கச்சத்தீவை மீட்பேன் என்பது ஜெயலலிதாவின் கபட நாடகம் : கருணாநிதி!!

623

Karunanidhi

கச்சத்தீவை மீட்பேன் என்பது ஜெயலலிதாவின் கபட நாடகம் என கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..

தேர்தல் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதா தொடங்கிய நாளிலிருந்து, என்னைப் பற்றி ஏதாவது குறை சொல்லிப் பேசாவிட்டால் அவருக்கு பேசிய மன நிறைவே இருக்காது போலும். ஆனால் நம்மைப் பொறுத்தவரையில் அவர் எழுப்பும் பிரச்சினைகளின் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சிதான்.

வாக்களிக்கப் போகும் முன்னர், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகளையும் படிக்கட்டும், நான் அவற்றிற்கு அன்றாடம் தருகின்ற விரிவான பதில்களையும் படிக்கட்டும், எது உண்மை, யார் பக்கம் நியாயம் என்று தெளிவடையட்டும். அருப்புக்கோட்டையில் பேசிய ஜெயலலிதா, ‘கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு கருணாநிதி உடந்தை என்பதை நான் அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டுகிறேன். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உச்ச நீதிமன்றத்தின் மூலம் கச்சத்தீவு மீட்கப்பட்டு தமிழக மீனவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

20.4.1992 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா? ‘கச்சத்தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக் கூடிய ஒன்றாக தெரியவில்லை’ என்று, மீட்பதற்கு முற்றுப்புள்ளி வைத்ததைப் போலப் பேசியது அவைக் குறிப்பில் இன்னமும் இருக்கிறது.

இந்த பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டதாக அம்மையார் (ஜெயலலிதா) இதுவரை எத்தனை முறை அறிக்கை விடுத்திருக்கிறார் என்று எண்ணித்தான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும், கச்சத்தீவினை நானும், மத்திய அரசும் சேர்ந்து கொண்டு தாரை வார்த்து விட்டதாகப் புகார்களை அடுக்கத் தொடங்கி விடுவார்.

கச்சத்தீவைத் தாரை வார்க்க தி.மு.க. எந்த காலத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை. தாரை வார்க்க உடன்படவும் இல்லை என்பதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நான் அறை கூவல் விட்டுச் சொல்லத் தயார்.

1974-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்த போதே, பொதுக்குழுவில், ‘இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுமான கச்சத்தீவின் மீது இலங்கைக்கு அரசுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தை, பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிக்கு எதிராக இந்த ஒப்பந்தம் அமைந்து விடக்கூடாது என்று தமிழக தி.மு.க. அரசு பல முறை ஆதாரங்களுடன் மத்திய அரசை அணுகித் தடுத்தும்கூட, அதனை அலட்சியப்படுத்திவிட்டு மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு அளித்துள்ள செயல் வேதனை தருவதாகும்’ என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

21.8.1974 அன்று பேரவையில் அரசின் சார்பில் என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானம், ‘இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்த பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது’ என்பதாகும்.

தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது கருணாநிதி கச்சத்தீவை மீட்க ஏன் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை என்று ஜெயலலிதா திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறார்.

1991 முதல் 1996-ம் ஆண்டு வரையிலும், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையிலும், ஏன் இப்போது 2011 முதல் 5 ஆண்டுகளாக ஜெயலலிதாதானே ஆட்சியிலே இருக்கிறார். இவர் ஏன் கச்சத்தீவை மீட்கவில்லை என்று நான் கேட்டிருந்தேனே, அதற்கு தனது நீண்ட பேச்சில் இப்போதாவது ஜெயலலிதா பதில் கூறியிருக்கலாமே. ஏன் பதில் இல்லை?

23.7.2003 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில், கச்சத்தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காயவைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தரக் குத்தகைக்குப் பெறலாம். அதே நேரத்தில் கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ளலாம் என்று இப்படியெல்லாம் அன்றைக்கு குத்தகை இறையாண்மை என்று எழுதியவர் தான் இன்றைக்கு அருப்புக்கோட்டை கூட்டத்தில் என்னைப் பார்த்து கேள்விக்கணை தொடுக்கிறார்.

ஜெயலலிதா ஏற்கனவே ஒரு முறை வெளியிட்ட அறிக்கையிலே ஒன்றைச் சொல்லியிருக்கிறார். ‘கச்சத்தீவு பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்கும்’ என்று அவரே வெளியிட்டிருக்கிறார்.

கச்சத்தீவை மீட்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது என்றும், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத்தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்றும், கச்சத்தீவில் இலங்கைக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே பேசிய, அறிக்கை விடுத்த ஜெயலலிதா அவ்வளவையும் திரை போட்டு மறைத்து மூடி விட்டு, கச்சத்தீவை நான் தாரை வார்த்து விட்டேன் என்றும், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை மீட்பேன் என்றும் தற்போது தேர்தல் நேரத்தில் பேசுவது தான் உண்மையான கபட நாடகம், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-தினத் தந்தி-