கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பநிலை உயர்வு!!

353

Temp

பூமியின் சராசரி வெப்பநிலை கடந்த மார்ச் மாதத்தில் 1.07 டிகிரி செல்சியஸ் அதிகரித்து, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது மிகவும் அதிர்ச்சியளிப்பதுடன் ஒரு வகையான பருவ நெருக்கடி நிலை உருவாகியிருப்பதாகவும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

20 ஆம் நூற்றாண்டு சராசரியுடன் ஒப்புநோக்குகையில், உலகம் முழுதும் மார்ச் மாதம் 1.07 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. பெப்ரவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.04 டிகிரி செல்சியஸ்.

ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் அளவுகள் 1891 ஆம் ஆண்டு முதல் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையன்று நாசா வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த 1951-1980 ஆம் ஆண்டுகளின் சராசரி வெப்பநிலையை ஒப்பிடும்போது கடந்த மார்ச் மாதத்தில் 1.28 டிகிரி செல்சியஸ் அதிக வெப்ப நிலை தாக்கியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

நாசா தரவுகளின் படி பெப்ரவரி மாதம் 1.34 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்ப நிலை அதிகரித்துள்ளது.

ஐ.நா. வானிலை மற்றும் தட்பவெப்ப நிலை அமைப்பான உலக வானிலை அமைப்பு கடந்த மார்ச் மாத வெப்பநிலை அதிகரிப்பானது கடந்த 100 ஆண்டுகால அதிகரிப்பை விஞ்சியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு முதல் பூமியின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது.

எவ்வாறாயினும், 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் எல் நினோ விளைவு தாக்கம் செலுத்தியதில் இந்த வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் எல் நினோ விளைவு ஒரு சிறிய தாக்கமே என்றும் பல நாடுகளின் தொழிற்துறை உற்பத்தி நடவடிக்கைகளினால் வெளியேறும் கரியமில வாயுவின் அதிகரிப்பினால் தான் வெப்ப நிலை பெரும்பாலும் உயர்கிறது என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்