
மணி ரத்னம் படத்திலிருந்து விலகியமைக்கான காரணம் தொடர்பில் ட்விட்டரில் சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.
ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவி வர்மனின் ஔிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் முதல் ஆரம்பமாகும் எனவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, நடிகர்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன.
துல்கர் ஒப்பந்தமான இரண்டு மலையாளப் படங்களின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் அவருக்குப் பதிலாக தெலுங்கு நடிகர் நானியைத் தேர்வு செய்தார் மணி ரத்னம்.
அதேபோல, திகதி பிரச்சினைகளால் இந்தப் படத்திலிருந்து நடிகை கீர்த்தி சுரேஷும் விலகினார். கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக வேறொரு கதாநாயகியைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், மணி ரத்னம் படத்தைக் கைவிட முடிவு செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
பிறகு, படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பிரமேம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த சாய் பல்லவி, கார்த்தியின் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமிழில் ஒரு நல்ல படத்தில் அறிமுகமாகவேண்டும் என்று இருந்த சாய் பல்லவியும் மணி ரத்னம் படம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டார்.
ஆனால், அதன் பிறகு கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் தற்போது அந்தப் படத்திலிருந்து சாய் பல்லவி விலகியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
நிறைய வதந்திகள் உலவி வருகின்றன. எனவே, நான் தனிப்பட்ட முறையில் அதைத் தெளிவுபடுத்தலாம் என உள்ளேன். யாருக்கும் மணி ரத்னம் படத்திலிருந்து வெளியே வர மனசு இருக்காது. எனக்கும் அப்படித்தான். புகழ்பெற்ற இயக்குநரான அவருக்கு ஒரு கதாப்பாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று நன்றாகவே தெரியும். அதேபோல, என் மீது அக்கறை உள்ளவராக எனக்கும் எது சரியாக இருக்கும் என்பதும் அவர் நன்றாக அறிவார். கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் நல்ல மனதுடன் எனக்குத் தெரிவித்தார். அவருடைய உயரத்துக்கு இதைச் செய்யவேண்டியதில்லைதான். அவருடைய ரசிகராக எல்லோரையும் போல நானும் இந்தப் படத்தில் மிக ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.





