ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக கூடாது : ஒபாமா வலியுறுத்தல்!!

292

Obama

பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க மக்கள் ஆதரவுகரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதன் மூலம் அதிபர் ஒபாமா பிரிட்டன் ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை கோபப்படுத்தியுள்ளார்.

பிரிட்டனுக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள அதிபர் ஒபாமா, அதில் ´´பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது மற்றும் உலகெங்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது போன்றவற்றில் பிரிட்டன் மேலும் செயற்திறனுடன் செயற்படுவதற்கு அது ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதே சிறந்தது’ என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இங்கிலாந்து தொடர்ந்து இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, அந்த நாட்டில் ஜூன் மாதம் 23ம் திகதி கருத்து வாக்கெடுப்பு நடக்கிறது.

இந்த கருத்து வாக்கெடுப்பில் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க மக்கள் ஆதரவுகரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார்.

பிரிட்டன் எந்த பாதையில் செல்வது என்று எடுக்கும் முடிவு, இன்றைய அமெரிக்கர்களின் எதிர்காலத்தில் பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தும் என்பதால், இதில் தமக்கும் ஆர்வங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்று கூறி வருகிற லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக இருக்க அமெரிக்கர்கள் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என சாடி உள்ளார்.