மன்னாரில் 10 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞனுக்கு விளக்கமறியல்!!

674

Mannar

மன்னார், உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞரை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரான இளைஞனை நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் பொலிஸார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இளைஞனை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவர், அயல் கிராமமான பேசாலை கிராமத்தில் மாலை நேர வகுப்பிற்கு சென்றுள்ளார். எனினும் ஆசிரியர் அங்கு இருக்கவில்லை. அதனால் மாலை நேர வகுப்புக்கள் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியை, அந்தப் பகுதியிலிருந்து பாழடைந்த வீட்டில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞரிடம் இருந்து தப்பிய, சிறுமி பேசாலை பகுதியில் உள்ள சிலரிடம் தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து உடனடியாக மாணவியின் பெற்றோரினூடாக பேசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

பேசாலை பொலிஸார் உடனடியாக குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனுக்கு எதிராக பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும், குறித்த சம்பவத்தை கண்டித்தும் உதயபுரம் கிராம மக்கள் நேற்று காலை 5 மணிமுதல் 6.30 மணி வரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வங்காலைபாடு சந்தியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.