வவுனியா பிரஜைகள் குழு முள்ளிவாய்க்கால் ஏழாம் வருட நினைவேந்தலை உணர்வுபூர்மாக அனுஸ்டிக்கும்!!

942

 
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மீளதகவமைக்கப்பட்டதன் பின்னர் முதலாவது மாத அமர்வு, வவுனியா மத்திய பேருந்து நிலைய மேல்மாடி கட்டடத்தில் நேற்று (23.04.2016) பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது.

தலைவர் கோ.ராஜ்குமார் – செயலாளர் தி.நவராஜ் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், புதிய உறுப்பினர்களை உள்ளீர்க்கும் அறிமுக நிகழ்ச்சி இடம்பெற்றதை தொடர்ந்து பதினொரு உறுப்பினர்களைக்கொண்ட தலைமைக்குழுவில் காணப்பட்ட வெற்றிடத்துக்கு, கடந்த மூன்று வருட காலத்துக்கும் மேலாக பிரஜைகள் குழுவுடன் இணைந்து நெருக்கடியான காலங்களில் பயணித்த ஊடகவியலாளர் சு.வரதகுமார் அவர்கள் குழுவின் ஒருமித்த சிபாரிசுவோடு நியமிக்கப்பட்டுள்ளார்.

மே 18, முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை வருடந்தோறும் அனுஸ்டித்து வருவதைப்போல இம்முறையும் முள்ளிவாய்க்கால் ஏழாம் வருட நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பது மற்றும் புதிய ஜனநாயக மார்க்ஸ்ஸிச லெனிஸிச கட்சியின் தலைமையில் 01.05.2016 அன்று வவுனியாவில் நடைபெறும் உழைக்கும் மக்கள் மேதினப்பேரணிக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தினருடன் இணைந்து முழுமையான பங்களிப்பை வழங்குதல் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் முன்னாள் தலைவர் கி.தேவராசா, ‘குழுவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளமை’ தொடர்பாக கடந்த 26.03.2016 சனிக்கிழமை அன்று நடைபெற்றிருந்த மீள்தகவமைவுக் கலந்துரையாடலில் குழுவால் நிறைவேற்றப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப்பிரேரணை பகிரங்கமாக இன்று (23.04.2016) சகல பிரஜைகளுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப்பிரேரணை



திரு.கி.தேவராசா,
நெடுங்கேணி,
வவுனியா வடக்கு.
26.03.2016

அன்புடையீர்,

நம்பிக்கையில்லாப்பிரேரணை
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் உறுப்புரிமையிலிருந்தும் தாங்கள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் கடந்தகால செயல்பாடுகள் – நடவடிக்கைகளை குழு விமர்சனத்துக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்தலும், எதிர்கால வேலைத்திட்டங்கள் – நிர்வாக ஒழுங்கமைப்புகள் தொடர்பில் தீர்மானித்தலுமாகிய இன்றைய (26.03.2016 சனிக்கிழமை பி.ப 2.00 மணி) மீள்தகவமைவுக் கலந்துரையாடலானது, செயலாளர் திரு.தி.நவராஜ் அவர்கள் ஒப்பமிட்டு 18.03.2016 திகதியிட்டு உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் அழைப்பின் பிரகாரம் சமுகமளித்துள்ள உறுப்பினர்களுடன் தங்கள் தலைமையில் நடைபெற்றிருந்தது.

செயலாளர் திரு.தி.நவராஜ் அவர்களால் 18.03.2016 திகதியிட்டு உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டிருந்த குறித்த கடிதத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம், பிரஜைகள் குழுவின் எதிர்கால வேலைத்திட்டங்களை வசதிப்படுத்தி நெருக்கடிகளை நிவர்த்திக்கும் வகையில் ‘தலைமைக்குழுவை மீளத்தெரிவுசெய்து கட்டமைக்குமாறு’ உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுதளித்து, தாங்கள் இன்றைய (26.03.2016 சனிக்கிழமை) மீள்தகவமைவுக் கலந்துரையாடலில் தலைமையுரையை நிகழ்த்தினீர்கள்.

தலைமைக்குழுவை மீளத்தெரிவு செய்து கட்டமைப்பதா? வேண்டாமா? என்பதை குழுவின் வாக்களிப்புக்கு விட்டு தீர்மானிப்போம் என்று உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவித்ததையடுத்து, தாங்கள் ‘சாதியவர்க்க ரீதியான’ வார்த்தைகளைப்பிரயோகித்து உறுப்பினர்களை திட்டிவிட்டு மீள்தகவமைவுக்கலந்துரையாடலில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளீர்கள். (இன்றைய கலந்துரையாடலில் தாங்கள் விளைவித்த குழப்பம் ஒலி வடிவத்தில் Voice Record ஆதாரமாக உள்ளது)

01. மீள்தகவமைவுக்கலந்துரையாடலை 05.03.2016 சனிக்கிழமை அன்று நிகழ்த்துவதற்கு குழுவின் ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா தங்களின் ஒப்புதல் பெற்று 03.03.2016 அன்று பொதுக்குழுக்கூட்டத்துக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். 05.03.2016 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்வதாக 04.03.2016 வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்திருந்த தாங்கள், மறுநாள் காலை அதாவது கலந்துரையாடல் நடைபெறவிருந்த 05.03.2016 சனிக்கிழமை அன்று, ‘குறித்த பொதுக்குழுக்கூட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தலைமைக்குழு கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறும்’ தெரிவித்து கலந்துரையாடலை புறக்கணித்திருந்தீர்கள். (இவ்விரண்டு சந்தர்ப்பங்களுக்கும் தங்களின் தொலைபேசி உரையாடல்கள் Voice Records ஆதாரமாக உள்ளன)

அவ்வாறே தங்களின் கோரிக்கையை ஏற்று 26.03.2016 சனிக்கிழமை இன்று தலைமைக்குழு கூட்டத்தை கூட்டியபோது, பொதுக்குழுக்கூட்டத்தை கூட்டுமாறு தெரிவித்து கலந்துரையாடலிலிருந்து வெளியேறிச்சென்றுள்ளீர்கள்.
‘பொதுக்குழுக்கூட்டத்தை கூட்டினால் தலைமைக்குழு கூட்டத்தை கூட்டுமாறும், தலைமைக்குழு கூட்டத்தை கூட்டினால் பொதுக்குழுக்கூட்டத்தை கூட்டுமாறும்’ இவ்வாறு மாறிமாறி முரண் பேச்சு பேசி, குழுவை மீளத்தகவமைத்து எதிர்கால வேலைத்திட்டங்கள் – நிர்வாக ஒழுங்கமைப்புகள் தொடர்பில் தீர்மானிக்க ஒத்துழைப்பு வழங்காதிருந்துள்ளீர்கள்.

02. தாங்கள் பிரஜைகள் குழுவின் தலைவர் பதவியை வகித்த காலப்பகுதியில் குழுவின் கடந்தகால செயல்பாடுகள் – நடவடிக்கைகளை குழு விமர்சனத்துக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்வதற்கும், எதிர்கால வேலைத்திட்டங்கள் – நிர்வாக ஒழுங்கமைப்புகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கும் ஏதுவாக தாங்கள் மாதாந்த கலந்துரையாடல்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. குழுவை பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயக்கமுறச்செய்தல், உறுப்பினர்களுக்கு பணிநிலை அடையாள அட்டைகள் வழங்குதல், புதிய உறுப்பினர்களை உள்ளீர்த்தல் இவ்வாறு குழுவை பலப்படுத்தும் அடிப்படை கட்டமைப்பு நடவடிக்கைகளில் தாங்கள் கவனமோ அன்றி ஆர்வமோ செலுத்தவில்லை.

03. மாவட்டத்திலோ அன்றி மாவட்டத்துக்கு வெளியேயோ வேறு சில சிவில் சமுக அமைப்புகளால் நிகழ்த்தப்பட்ட கலந்துரையாடல்கள் – செயலமர்வுகளுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக தங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை குழுவுக்கு பகிரங்கப்படுத்தி, குறித்த அழைப்புகள் தொடர்பில் கூடிக்கலந்தாலோசித்து விவாதிக்காமலும் – குழுவின் ஒப்புதல் பெறாமலும் தாங்கள் தன்னிச்சையாக பத்துக்கும் மேற்பட்ட கலந்துரையாடல்கள் – செயலமர்வுகளில் பங்குபற்றியுள்ளீர்கள். (அந்த அமைப்புகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை – காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கும் – கொள்கைக்கும் ஏற்ப இசைந்துவராமல் – வளைந்துகொடாமல் முரண் தளத்தில் நின்று அலுவல்கள் செய்துகொண்டிருக்கும் அமைப்புகள் என்பதும் தாங்கள் அறிந்ததே)

04. இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்களின் பிரதிநிதிகள் சிலர், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக தங்களுக்கு விடுத்த அழைப்பை தாங்கள் குழுவுக்கு தெரியப்படுத்தாமல் சந்திப்புகளில் ஈடுபட்டமை.
05. ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புக்குழு 2015 நவம்பரில் இலங்கைக்கு முதல் தடவையாக வருகை தந்தபோது, அந்த கண்காணிப்புக்குழுவுக்கு ‘தமிழ்த்தேசிய இனத்தின் பெருந்துயரமான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உண்மை நிலைவரம்’ தொடர்பில் விதந்துரைப்பதற்கு, ‘ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் பிரதிநிதியாக’ தங்களுக்கு 12.11.2015 அன்று வழங்கப்பட்ட கிடைத்தற்கரிய அந்தச்சந்தர்ப்பத்தில், தங்களது தனிப்பட்ட குடும்பக்கதைகளை மட்டுமே எடுத்துரைத்து வாய்ப்பையும் – நம்பிக்கையையும் வீணடித்தமை.

06. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் – மக்கள் நலன் அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கமும் இணைந்து 2015 மே 18 அன்று, வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்’ நிகழ்ச்சியை அனுஸ்டித்தபோது, ஏலவே நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்பட்டிருந்ததன் பிரகாரம் ‘உணர்வுப்பகிர்வு’ நிகழ்ச்சி நேரத்தில் போரால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர், (அன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த) அரசியல் பிரமுகர்களின் கடந்தகால அருவருப்பான – கசப்பான நடத்தைகள், உண்மைத்தன்மை? தொடர்பாக கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தவேளை, மேடையில் ஏறி ஒலிவாங்கியை பறித்தெடுத்து, மாவீரத்தெய்வங்களினதும் – மேன்மக்கள் ஆத்மாக்களினதும் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அந்த உணர்வுபூர்வமான அரங்கத்தில் படுகொச்சைத்தனமான (தூசன) வார்த்தைகளால் ஏசியதும், அந்த தாயாரை மேடையை விட்டு பலவந்தமாக இறக்கியதும். (பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரலாக ஒலிக்காமல் அரசியல்வாதிகளின் முகமாக செயல்பட்டமை)

07. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவராலயத்தால் Nominations for Civil Society Representatives to Serve on the Peace building Fund Board க்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக உறுப்பினரை பரிந்துரைக்குமாறு 25.02.2016 திகதியிடப்பட்டு 28.02.2016 அன்று மின்னஞ்சல் மூலமாக கிடைக்கப்பெற்ற Nomination Form தொடர்பில், குழுவுடன் கலந்துரையாடி முடிவு செய்யாமல் தன்னிச்சையாக தங்களது பெயரை இட்டு படிவத்தை பூர்த்திசெய்து அனுப்பியமை.

இவ்வாறு தனிமனித பலவீனங்களுக்கு ஆட்பட்டு, பிரஜைகள் குழுவுக்குள் ‘கூட்டு முயற்சி – கூட்டுப்பொறுப்பு – கூட்டுநலன் பண்புகளை’ நிராகரித்து தொடர்ந்துகொண்டிருக்கும் தங்களது ஏதேச்சதிகாரம் ஆனதும் சுயநலன்களை முன்னிறுத்துவதும் ஆகிய செயல்பாடுகளுக்கு எதிராகவும்,

தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் – விமர்சனங்கள் தொடர்பாக குழுவின் கலந்துரையாடல்களுக்கு சமுகமளித்து, ‘தங்கள் பக்க நியாயங்களை (சாதக பாதகங்களை) உறுப்பினர்களுக்கு விளக்குதல் – பொறுப்புக்கூறுதல் – பதிலளித்தல்’ எனும் உயரிய கடமைப்பாட்டை தாங்கள் முற்றாக தவிர்த்து, வேறுபல சிவில் சமுக அமைப்புகளில் நிதி விவகாரங்களில் தவறிழைத்தவர்களுடனும், நெறிபிறழ்வு நடத்தைகளால் சமுக நம்பகத்தன்மையை இழந்தவர்களுடனும் தாங்கள் தவறான கூட்டுச்சேர்ந்துகொண்டு, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் உன்னத பணிகளுக்கும் நன்மதிப்புக்கும் களங்கத்தையும் அகௌரவத்தையும் ஏற்படுத்தும் வகையில் தாங்கள் குழுவை மலினப்படுத்தும் – நலினப்படுத்தும் கருத்துகளை பொதுவெளியிலும், ஊடக வெளிச்சத்திலும் கூறிக்கொண்டிருப்பதைக் கண்டித்தும்,

செயலாளர் திரு.தி.நவராஜ் அவர்களால் தங்கள் மீது நம்பிக்கையில்லாப்பிரேரணை இன்று (26.03.2016 சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு) கொண்டுவரப்பட்டு, குழு உறுப்பினர்களால் இப்பிரேரணைக்கு ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டு, ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவில் தங்களது உறுப்புரிமை நிரந்தரமாக இரத்துச்செய்யப்பட்டு அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தாங்கள் நீக்கப்பட்டுள்ளீர்கள்’ என்பதையும், இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள 26.03.2016 சனிக்கிழமை இன்றிலிருந்து இனிவரும் காலங்களில் தாங்கள் எந்தச்சந்தர்ப்பத்திலும் எந்தவேளையிலும் ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் பெயரால் செயல்பட முடியாது’ என்பதையும் மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

தாங்கள் இன்றைய மீள்தகவமைவுக்கலந்துரையாடலிலிருந்து சுயமாக வெளியேறிச்சென்றதன் பின்னர், உபதலைவர் திரு.நா.நடராசா அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டு, ‘பிரஜைகள் குழுவின் எதிர்கால வேலைத்திட்டங்களை வசதிப்படுத்தி நெருக்கடிகளை நிவர்த்திக்கும் நோக்கத்தில் புதிய தலைமைக்குழுவை தெரிவுசெய்து கட்டமைத்துள்ளோம்’ என்பதையும் மெத்த மகிழ்ச்சியுடனும் – நம்பிக்கையுடனும் அறியத்தருகின்றோம்.

இன்றைய மீள்தகவமைவுக்கலந்துரையாடலில் சமுகமளித்துள்ளவர்களின் ஒருமித்த சிபாரிசுவோடு (வாக்களிப்பு ஏதுமின்றி) தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய தலைமைக்குழுவில் உறுப்புரிமை பெற்றுள்ள செயல்பாட்டாளர்கள் தமது பொறுப்புகள் – கடமைகளை 26.03.2016 இல் இருந்து நடைமுறைக்கு கொண்டுவருவதற்கும் – நிறைவேற்றுவதற்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்’

1 2 Untitled-1 Untitled-2 Untitled-3 Untitled-4 Untitled-5 Untitled-6