நாவுக்கு சுவையும் உடலுக்கு ஆரோக்கியமும் தரும் முருங்கைக்கீரை குழம்பு..

572

murungai

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த முருங்கைக்கீரை – 3 கைப்பிடி,
பாசிப்பருப்பு – 150 கிராம்,
துவரம்பருப்பு – 50 கிராம்,
புழுங்கலரிசி – 150 கிராம்,
சின்ன வெங்காயம் – 200 கிராம்,
உப்பு, மஞ்சள் தூள் – கால் மேசைக் கரண்டி .

அரைப்பதற்கு..

காய்ந்த மிளகாய் – 6,
மல்லி – 1 மேசைக் கரண்டி,
பெ.சீரகம் – 1 மேசைக் கரண்டி,
சீரகம் – 1 மேசைக் கரண்டி,
தேங்காய் – 1 மூடி.

தாளிக்க…

சீரகம் அரை மேசைக் கரண்டி
காய்ந்த மிளகாய் – 2,
சின்ன வெங்காயம் – சிறிது,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை

பாசிப்பருப்பை வெறும் பாத்திரத்தில் வாசனை வரும் வரை வறுத்து, துவரம்பருப்புடன் சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். குக்கரில் வேக வைப்பதைவிட, சாதாரண பாத்திரத்தில் வேக வைத்தால் ருசி கூடும். அரிசியை வெறும் பாத்திரத்தில் பொரியும் வரை வறுக்கவும். பிறகு அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை, தேங்காய் தவிர்த்து வெறும் பாத்திரத்தில் வறுக்கவும். கடைசியில் மஞ்சள் தூள் சேர்த்துப் பிரட்டி, அரைக்கவும். எடுக்கும் போது, வறுத்து வைத்துள்ள அரிசியைச் சேர்த்து, ஒரே ஒரு சுற்று சுற்றி, மணல் மாதிரி அரைக்கவும்.

அரிசியைச் சேர்த்ததும் வாசனை வருவதை உணரலாம். பின் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து, இரண்டே நொடிகள் சுற்றி எடுக்கவும் (வெங்காயம் முழுவதும் அரைபடக் கூடாது). அவிந்த பருப்பில் முருங்கைக்கீரையை குறுக்கும், நெடுக்குமாக நறுக்கிச் சேர்க்கவும். ஒரு நிமிடம் கொதித்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். தேங்காய் துருவல் சேர்த்து, இன்னும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு, உப்பு சேர்த்து இறக்கவும். மொத்தமாக 5 நிமிடங்களுக்கு மேல் கொதிக்கக் கூடாது. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துக் கீரையில் கொட்டவும்.