இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஆடு!!

456

homage_goat_002.w540

மனிதனை மனிதனே மதிக்காமல் போட்டி, பொறாமை குணத்தோடு இருக்கும் இந்த நவீன காலத்தில், ஆடு ஒன்று சாதி, மதம் வேறுபாடின்றி துக்க வீடுகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறது. அதோடு நில்லாமல், இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும்வரை அந்த வாயில்லா ஜீவன் சுடுகாட்டிலேயே நின்று, காரியம் முடிந்தபிறகு கிராம மக்களோடு திரும்பி வருகிறது.

இந்த சம்பவம் இந்தியாவில் மைசூரு தாலுகா பெலவாடி கிராமத்தில் நடந்துள்ளது.

மைசூரு தாலுகா பெலவாடி கிராமத்தை சேர்ந்தவர் புட்டராமா. விவசாயியான இவர் தனது வீட்டின் அருகே ஆட்டுப்பட்டி அமைத்து ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு ஆட்டுக்கு மட்டும் விசேஷ குணம் உள்ளது. அதாவது, பெலவாடி கிராமத்தில் யார் இறந்தாலும், அதனை அறிந்து கொள்ளும் இந்த வாயில்லா ஜீவன், முதல் ஆளாக அங்கு ஆஜராகி விடுகிறது.
அங்கு செல்லும் இந்த ஆடு, தனது சைகைகள் மூலம் இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறது. பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு சுடுகாடு செல்கிறது. அங்கு இறந்தவரின் உடலுக்கு காரியம் முடியும் வரை, அந்த ஆடு சுடுகாட்டிலேயே சுற்றி வருகிறது.

மேலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும்போது, தனது காலால் மண்ணை வாரி போட்டு அஞ்சலி செலுத்துகிறது. பின்னர் கிராம மக்களோடு, சேர்ந்து வீட்டுக்கு திரும்பி வருகிறது. இதுவரை இந்த வாயில்லா ஜீவன் பெலவாடி கிராமத்தில் 500–க்கும் மேற்பட்டோரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி உள்ளது.

ஆட்டின் இந்த செயல் அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அந்த ஆடு வலம் வருகிறது. மேலும் பெலவாடி கிராம மக்கள், கடவுளுக்கு இணையாக அந்த ஆட்டை வணங்கி வருகிறார்கள்.
அந்த ஊரில் ஏதாவது திருவிழா நடந்தால் இந்த ஆட்டையும் அலங்கரித்து அதற்கு படையலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மக்களோடு மக்களாக வாழ்ந்து வரும் இந்த ஆட்டை அந்த பகுதி மக்கள் எந்த குறையும் இல்லாமல் தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக பாவித்து கவனித்து வருகிறார்கள். இதுபற்றி அறிந்த பக்கத்து கிராமத்தில் உள்ள மக்களும் அந்த ஆட்டை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் புட்டராமா கூறுகையில், நான் வளர்த்து வரும் மற்ற ஆடுகளை போலவே இந்த ஆட்டையும் வளர்த்து வந்தேன். ஆனால், அந்த ஒரு ஆட்டிற்கு மட்டும் ஏதோ ஒருவித சக்தி இருப்பதாக உணருகிறேன். மற்ற ஆடுகளில் இருந்து இது வேறுபட்டு காணப்படுகிறது. இந்த ஆடால் தான், நான் முன்னேற்றம் அடைந்ததாக கருதுகிறேன்.நான், கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்துவதற்காக தான் இந்த ஆட்டை வளர்த்து வந்தேன். ஆனால் அதனிடம் விசேஷ சக்தி இருப்பதை உணர்ந்தவுடன், அந்த ஆட்டை பலியிடும் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ‘இது ஒரு அதிர்ஷ்டமான ஆடு‘ என்று மக்கள் கூறுகிறார்கள். இந்த ஆடால் நான் பெருமை அடைந்துள்ளேன் என்றார்.