கடல் அலைகளின் இயங்காற்றலை மின்சாரமாக மாற்றும் புதிய முறையிலான மின் உற்பத்தியில் டென்மார்க் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
உலகளவில் மின்சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது இந்த தேவையை ஈடுசெய்ய அனல் மின்சாரம், புனல் மின்சாரம், சூரியஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற மரபுசார்ந்த மின்சார உற்பத்தியையும் கடந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அணுசக்தி மூலமாகவும் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கடல் அலைகளின் இயங்காற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய முறையை டென்மார்க் நாட்டை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
கடலின் நடுவே, படகுபோன்ற ஒரு மிகச்சிறிய நிலையத்தை அமைத்து, அதில் 10 மீட்டர் சுற்றளவு கொண்ட 20 பிளாஸ்டிக் மிதவைகள் இணைக்கப்படுகின்றன.
கடல் அலை உந்து சக்தி ஆற்றலுக்கு ஈடுகொடுத்து மேலும் கீழுமாக அசையும் இந்த மிதவைகள் கடல் அலைகளின் இயங்காற்றல் மூலம் கிடைக்கும் சக்தியை மின்சாரமாக அருகாமையில் உள்ள முனையத்துக்கு கடத்துகின்றன.
இவ்வகையில், கடத்தப்படும் மின்னாற்றல் அந்த முனையத்தில் இருந்து வேறொரு பகிர்மான நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்படும் 20 பிளாஸ்டிக் மிதவைகளை கொண்ட ஒவ்வொரு நிலையமும் நாளொன்றுக்கு 6 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
இப்படி, ஒரு நிலையத்தின் இயக்கம் வாயிலாக 24 மணிநேரத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் மட்டும் சுமார் 4000 வீடுகளின் மின்சார தேவையை பூர்த்தி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது என இந்த நவீன கருவியை உருவாக்கியுள்ள ’வேவ் ஸ்டார்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே முறையில், உலகம் முழுவதும் கிடைக்கும் கடலைலைகளின் இயங்காற்றலில் ஒரு சதவீதத்தை கிரகித்துக் கொண்டாலே உலகின் தற்போதைய மின்சார தேவையை விட ஐந்து மடங்கு அதிகமான மின்னாற்றலை உற்பத்தி செய்யலாம் எனவும் இந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அது மட்டுமன்றி, கடலில் அமைக்கப்படும் இந்த சிறிய நிலையங்களின் மூலமாக அலைகளில் இருந்து மட்டுமல்ல சூரிய சக்தியின் மூலமாகவும், காற்றாலை மூலமாகவும் ஒரே வேளையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ செய்திக் குறிப்பு சுட்டிக்காட்டுகிறது.