மரணித்த மனைவிக்காய் பேஸ்புக்கில் தாஜ்மஹால் கட்டிய ஊடகவியலாளர்!!

253

FB Taj

மரணித்த மனைவிக்காய் ஒரு பேஸ்புக் பக்கம் உருவாக்கி, அதனை தனது மனைவியின் ஞாபகார்த்தமாய் பராமரித்துவரும் ஆச்சரியமான ஊடகவியலாளர் ஒருவர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

கொழும்பு, மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் என்பவர் வானொலி, பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராக செயற்படுகின்றார்.

அத்துடன் முஸ்லிம் ஐக்கிய முன்னணி, ஊழலுக்கு எதிரான அமைப்புகள் போன்றவற்றிலும் அங்கம் வகிக்கும் இவர், பொதுமக்களுக்கு எதிரான அநீதிகளின் போது நண்பர்களைத் திரட்டி அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுப்பதிலும் முன்னின்று செயற்படுகின்றார்.

இந்த நிலையில் கொலன்னாவை பிரதேசத்தில் திருமணமாகி இனிமையாக கழிந்து கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில் எதிர்பாராத பேரிடியாக இவரது மனைவியின் மரணம் நிகழ்ந்துள்ளது.

இதனையடுத்து தனது மனைவியின் ஞாபகங்களை மறக்க முடியாத கலீலுர் ரஹ்மான், அவரது பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் உருவாக்கி மனைவியின் ஞாபகங்களை அதில் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிக் கொண்டிருக்கின்றார்.

மனைவியின் பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு தினங்களில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் இவர், தனது ஒவ்வொரு வெற்றி மற்றும் மகிழ்ச்சியான தருணங்களையும் மனைவியின் பேஸ்புக் பக்கத்துடனும் பகிர்ந்து கொள்கின்றார்.

அது மாத்திரமன்றி தன் மனைவியின் பெயரால் ஒரு நற்பணி மன்றம் அமைத்து தன்னாலான வகையில் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

ஊடகப் பிரபலம் கிடைத்தவுடன் மனைவிக்குத் தெரியாமல் மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் மீது நாட்டம் கொண்டு மனைவிமாரின் அகால மரணத்துக்குக் காரணமாக அமையும் ஊடகவியலாளர்கள் மத்தியில் கலீலுர் ரஹ்மானின் செயற்பாடுகள் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மனைவியின் ஞாபகமாய் தாஜ் மஹால் கட்ட வசதியில்லாத இந்த ஏழைப்பங்காளன் ஊடகவியலாளன், தனக்குப் பழக்கப்பட்ட எழுத்துத்துறை மூலமாய் மனைவிக்காய் ஒரு நவீன தாஜ்மஹாலைக் கட்டிக் கொண்டிருப்பதை காணும் போது அம்பிகாபதி- அமராவதி, லைலா-மஜ்னு, ஷாஜஹான்- மும்தாஜ் நம்மிடையே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.